தேசிய ஆணழகன் போட்டிக்கு தகுதி மளிகை கடைக்காரர் மகன் சாதனை
தாவணகெரேயை சேர்ந்த கல்லுாரி வாலிபர், மங்களூரில் நடக்க உள்ள தேசிய அளவிலான ஆணழகன் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.தாவணகெரே மாவட்டம், ஹலே குந்துவடாவை சேர்ந்தவர்கள் பசவராஜ் - லட்சுமி தேவி தம்பதி. இவர்கள் மளிகை கடை நடத்தி வருகின்றனர். இவர்களது மகன் ராகவேந்திரா, 21. ஜி.எப்.ஜி.சி., கல்லுாரியில் முதலாம் ஆண்டு பி.ஏ., படித்து வருகிறார்.தாவணகெரே பல்கலைக்கழகம் மற்றும் உடற்கல்வி இயக்குனர்கள் சங்கம் சார்பில் ஆணழகன் போட்டி நடந்தது. இதில், பல கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். 90 கிலோ பிரிவில் பங்கேற்ற ராகவேந்திரா, தங்கப்பதக்கம் பெற்றார். இதன் மூலம், மங்களூரில் விரைவில் நடக்க உள்ள தேசிய அளவிலான ஆணழகன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.இது குறித்து, ராகவேந்திரா கூறியதாவது:ஆணழகன் போட்டியில் 90 கிலோ பிரிவில் தங்கம் வென்றுள்ளேன். இதன் மூலம், மங்களூரில் நடக்கும் தேசிய ஆணழகன் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளேன்.தினமும் எங்கள் மளிகை கடையில் பெற்றோருக்கு உதவியாக பணியாற்றுகிறேன். கஷ்டப்பட்டு தான் மேலே வந்துள்ளேன். தேசிய அளவிலான போட்டியில் கடுமையான போட்டி இருக்கும். ஏனெனில், அவர்களில் பலர், மிகவும் ஊட்டச்சத்தான உணவுகளை சாப்பிட்டு, உடம்பை பாதுகாப்பர்.தினமும் அசைவம், காய்கறிகள், சத்தான உணவு சாப்பிட, 800 முதல் 1,000 ரூபாய் செலவாகும். இருந்தாலும், போட்டிக்காக தினமும் தயாராகி வருகிறேன். தேசிய அளவில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார். - நமது நிருபர் -