நாடு விட்டு நாடு வந்து பணியாற்றுவோரை குஷிப்படுத்த குஜராத் அரசின் புதிய முயற்சி
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உலகின் பல நாடுகளில், 'சீனா டவுன்'களை பார்க்கலாம். அவை, சிவப்பு லாந்தர் விளக்குகள், சீன எழுத்துக்கள், டிராகன்கள் மற்றும் விரிவான பகோடாக்கள் எனப்படும், அடுக்கு கோபுரங்கள் போன்றவற்றுடன், உடனடியாக அடையாளம் காணக்கூடிய வகையில் அமைந்திருக்கும். நாம், சான் பிரான்சிஸ்கோ நகரின் சைனா டவுனில் இருந்தாலும், பெய்ஜிங்கில் இருப்பது போன்றதொரு உணர்வை அது தரும். இது, உள்ளூர்வாசிகளுக்கு கவர்ச்சிகரமானதாக இருந்தாலும், வெளிநாட்டினருக்கு, அவர்களது தாய்வீட்டை கண் முன் நிறுத்துவதாக அமைந்திருக்கும். இதேபோன்ற ஓர் அமைப்பு, இந்தியாவிலும் அமைய உள்ளது. இந்தியாவின் முதல் செமிகண்டக்டர் கிளஸ்டரான குஜராத்தின் தோலேராவில் தான், இதே போன்றதொரு ஏற்பாட்டை உருவாக்க, அம்மாநில அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தோலேராவில், 'குளோபல் டென்ட் சிட்டி' எனப்படும், உலகளாவிய சிறு நகரம் அமைய உள்ளது. இது, தேலேராவில் தங்கள் வேலைக்காக நாடு விட்டு நாடு வந்து பணி செய்யும் பணியாளர்களை, அவர்களது நாட்டில் இருப்பது போன்று, குறிப்பாக அவர்களின் வீட்டில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துவதே இந்நகரத்தின் முக்கிய நோக்கம். இந்த சிறு நகரத்தில் தைவான், கொரியா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் உட்பட பல்வேறு நாடுகளின் உணவுகளை கொண்ட 'புட் ஸ்ட்ரீட்'கள் அமைக்கப்படும். அத்துடன் உயர்நிலை மால்கள், உலகளாவிய ஊழியர்களின் ரசனைகளை பூர்த்தி செய்யும் வகையிலான ஹோட்டல்கள், விருந்தினர் மாளிகை உள்ளிட்டவைகளும் அமைய உள்ளன. உணவகங்கள் மட்டுமின்றி, பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கான கடைகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான இடங்களும் இடம் பெற்றிருக்கும். இவை தவிர கோல்ப் கிளப்புகள் மற்றும் கோல்ப் மைதானங்கள் உள்ளிட்டவைகளும் அமைக்கப்படும் என்று, குஜராத் மாநில அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தோலேராவில் மட்டுமின்றி, அங்கிருந்து, 100 கி.மீ., தொலைவில் உள்ள சனந்திலும் இதே போன்ற கலாசார மையம், பொழுதுபோக்கு, விளையாட்டு வசதிகள் மற்றும் உணவகங்கள் உருவாக்கப்பட உள்ளதாக தெரிகிறது.