உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும் ஹலசூரு ஏரி

ரூ.30 கோடியில் சீரமைக்கப்படும் ஹலசூரு ஏரி

ஹலசூரு : பிரசித்தி பெற்ற ஹலசூரு ஏரி, 30 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படுகிறது. மிதக்கும் பாலம், படகு சவாரி, பூங்கா மேம்பாடு, புதிய நடைபாதை என பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.பெங்களூரு நகரின் கிழக்கு பகுதியில் 106 ஏக்கர் பரப்பளவில் ஹலசூரு ஏரி உள்ளது. கெம்பே கவுடா காலத்தில் அமைக்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பெங்களூரு ஆணையர் சர் லெவின் பெந்தம் போரிங் சீரமைத்தார். ஏரியின் நடுவில் ஆங்காங்கே தீவுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பணிகள் துவக்கம்

ஏரியை சுற்றிலும் மரங்கள் வளர்ந்துள்ளன. இவை, பறவைகள் தங்குவதற்கு தோதுவாக உள்ளன. இந்த ஏரியை மேலும் மெருகேற்ற, பல்வேறு நிபுணர்கள் திட்டம் வகுத்து உள்ளனர். பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து, சுத்தம் செய்யும் பணியை துவக்கி உள்ளன.ஹலசூரு ஏரியை மெருகேற்ற, 30 கோடி ரூபாயில் இருவழி நடைபாதை, ஏரி சுற்றுச்சுவர் கட்டுவது, புதிதாக நடைபாதைகள், ஏரியின் நடுவில் அழகான நீரூற்று அமைப்பது உட்பட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

பறவைகள் மாயம்

சிவாஜி நகர் தொகுதியில் உள்ள இந்த ஏரியின் மேம்பாடு குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரிஸ்வான் அர்ஷத் கூறியதாவது:ஏரியில் உள்ள விநாயகர் சிலைகளை கரைக்கும் பகுதியில், மாசு அடைந்த தண்ணீர், ஏரியில் கலப்பதை தடுக்க, தடுப்புகள் அமைக்கப்படும். இங்கு கலக்கும் சாக்கடை கழிவுகள் அகற்றப்பட்டு வருகின்றன.ஏரியின் நடுவில் உள்ள தீவுகளுக்கு வெளிநாட்டு பறவைகள் வந்து கொண்டிருந்தன. தற்போது அவை வருவதில்லை. இந்த பறவைகளை ஈர்க்கும் வகையில், செடிகள் நடப்படும். இதனால் மீண்டும் பறவைகள் வரும். நீரின் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் வகையில் நான்கு, 'ஏரேட்டர்' கருவிகள் பொருத்தப்படும். ஏரியை சுற்றிலும் அலங்கார விளக்குகள்; யோகா செய்ய தனி இடம் அமைக்கப்படும்.பெங்களூரில் உள்ள ஏரிகளுக்கு முன்மாதிரியாக ஹலசூரு ஏரி மாற்றப்படும். குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்படும். சிறிய கால்பந்து மைதானம், சிறிய நுாலகம் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.தற்போது 30 கோடி ரூபாயில், பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 30 முதல் 40 கோடி ரூபாய் தேவைப்படும். தேவையான நிதி ஒதுக்குவதாக, சிறிய நீர்ப்பாசன துறை அமைச்சர் போசராஜ் வாக்குறுதி அளித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை