ஹரித்வார் கோவில் விபத்து அரவிந்த் கெஜ்ரிவால் இரங்கல்
புதுடில்லி:“ஹரித்வாரின் மான்சா தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசல் வெறும் விபத்து அல்ல; உத்தராகண்ட் மாநில அரசின் நிர்வாகத் தோல்வி,” என, ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வார் மான்சா தேவி கோவிலில் நேற்று ஏற்பட்ட நெரிசலில், ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். ஏராளமானோர் காயம் அடைந்துள்ளனர். படிக்கட்டில் மின்சாரம் பாய்ந்ததாக வதந்தி பரவியதால் இந்த விபத்து ஏற்பட்டது என ஹரித்வார் எஸ்.பி., பிரமேந்திர சிங் தோபால் கூறியுள்ளார். இதுகுறித்து, சமூக வலைதளத்தில், அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவு: புனித நகரமான ஹரித்வாரில் மான்சா தேவி கோவிலில் ஏற்பட்ட நெரிசலில், ஆறு பேர் உயிரிழந்து இருப்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோர் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறேன். மதத் தலங்களில் நடக்கும் இதுபோன்ற சம்பவங்கள் அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தை காட்டுகின்றன. இது வெறும் விபத்து அல்ல; உத்தரகாண்ட் அரசு நிர்வாகத்தின் தோல்வி. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.