பிரதமர் தாய் குறித்து ஏ.ஐ., வீடியோ: உடனடியாக நீக்க ஐகோர்ட் உத்தரவு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: சமூக ஊடகங்களில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தாய் ஹீரா பென்னின் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு வீடியோவை உடனடியாக நீக்குமாறு பீஹார் மாநில காங்கிரசுக்கு பாட்னா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இங்கு முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. பீஹார் சட்டசபைக்கு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சமீபத்தில் வாக்காளர் அதிகார யாத்திரை நடத்தினார். அப்போது நடந்த பொதுக் கூட்ட மேடையில் ஏறிய அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீரா பென் குறித்து அவதுாறு பரப்பும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே, பீஹார் மாநில காங்., சார்பில் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில், பிரதமர் நரேந்திர மோடியின் கனவில், அவரது தாய் ஹீரா பென் வருவது போல சித்தரிக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோவும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் பா.ஜ.,வின் டில்லி தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளரான சங்கேத் குப்தா என்பவர், அளித்த புகாரின் அடிப்படையில் பீஹார் மாநில காங்., தலைவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, பாட்னா உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: அனைத்து விதமான சமூக ஊடக தளங்களில் இருந்தும், ஏ.ஐ., மூலம் உருவாக்கப்பட்ட பிரதமர் மோடியின் தாய் குறித்த போலி வீடியோவை காங்கிரஸ் கட்சி உடனடியாக நீக்க வேண்டும். இவ்வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் மற்றும் சமூக ஊடகங்களான 'பேஸ்புக், எக்ஸ், கூகுள்' ஆகியவை பதிலளிக்க வேண்டும். இவ்வாறு உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.