உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவு; ஸ்விகி சீல் திட்டம் அறிமுகம்

வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவு; ஸ்விகி சீல் திட்டம் அறிமுகம்

புதுடில்லி: வாடிக்கையாளர்களுக்கு சுகாதாரமான உணவுகளை டெலிவரி செய்வதை உறுதி செய்யும் விதமாக, புதிய திட்டத்தை ஸ்விகி அறிமுகம் செய்துள்ளது. ஆன்லைனில் ஆர்டர் செய்யும் உணவுகளை டோர்ஸ்டெப்பில் டெலிவரி செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக திகழ்வது ஸ்விகி. லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தின் 'ஆப்'பை பயன்படுத்தி வருகின்றனர். இப்படி ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படும் உணவுகளில் தரமில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளும், புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், வாடிக்கையாளர்களுக்கு தரமான உணவுகளை விநியோகம் செய்யும் நோக்கில், புதிய முயற்சியை ஸ்விகி கையில் எடுத்துள்ளது. அதாவது, 'ஸ்விகி சீல்' எனப்படும் புதிய பேட்ச் முறையை இன்று ஸ்விகி அறிமுகம் செய்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து கருத்துக்களைக் கேட்டு, தங்களுடன் ஒப்பந்தம் போட்டுள்ள உணவகங்களின் உதவியுடன் இந்த 'ஸ்விகி சீல்' முறை அமல்படுத்தப்படுகிறது. அதாவது, தரமான, சுகாதாரமான உணவுகளை வழங்கும் உணவகங்களுக்கு, வாடிக்கையாளர்களின் அளிக்கும் கருத்துக்களின் அடிப்படையில், இந்த 'ஸ்விகி சீல்' பேட்ச் வழங்கப்படும்.இந்த 'ஸ்விகி சீல்' பேட்ச் இருக்கும் உணவகங்கள், சுத்தத்திலும், தரத்திலும் சிறந்தவை என்று வகைப்படுத்தப்பட்டு, வாடிக்கையாளர்கள் மத்தியில் உணவகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். இதன் மூலம், உணவகங்களில் சுகாதாரமான, தரமான உணவுகளை வழங்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று ஸ்விகி நிறுவனம் நம்புகிறது. உணவகங்களின் உணவுப் பட்டியலில் கூட இந்த முறை குறித்து குறிப்பிடப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக புனேவில் அறிமுகப்படுத்தப்படும் , 'ஸ்விகி சீல்' முறை, விரைவில் இந்தியா முழுதும் உள்ள 650 நகரங்களில் விரிவுபடுத்தப்படும் என்று ஸ்விகி நிறுவனம் கூறியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ