மஜிதியா மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
சண்டிகர்:தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என சிரோமணி அகாலி தளம் தலைவர் விக்ரம் சிங் மஜிதியா தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை, 29ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவர் விக்ரம் சிங் மஜிதியா, சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த மாதம், 25ம் தேதி பஞ்சாப் மாநில ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் ஏழு நாட்கள் விசாரிக்க, ஊழல் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து மேலும், நான்கு நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டது.விசாரணைக்குப் பின் கடந்த, 6ம் தேதி மொஹாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, மஜிதியா சிறையில் அடைக்கப்பட்டார்.இதற்கிடையில், அரசை விமர்சனம் செய்ததால் தான் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், தன்னை கைது செய்தது சட்டவிரோதம் என, பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மஜிதியா மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய, மஜிதியாவின் வழக்கறிஞர், மூன்று வாரங்கள் அவகாசம் கேட்டார். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, விசாரணையை, 29ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.