உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு ஹீட்டர் குளிர்கால செயல்திட்டம் அமல்
புதுடில்லி:டில்லி உயிரியல் பூங்காவில் மாசு மற்றும் கடுங்குளிரில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்க, குளிர்கால செயல் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.கடுங்குளிர் நிலவும் டில்லியில், காற்று மாசும் மோசமான நிலையிலேயே நீடிக்கிறது. தேசிய தலைநகர் பிராந்தியத்தில் காற்று மாசைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், டில்லி உயிரியல் பூங்காவிலும் மாசு மற்றும் கடுங்குளிரில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்க குளிர்கால செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. பூங்கா வளாகத்துக்குள் டீசல் வாகன பயன்பாடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. வளாகம் முழுதும் தண்ணீர் தெளிக்கப்படுகிறது.துப்புரவு பணியிலும் தூசுக் கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. விலங்குகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகள் அருகே தூசி எழுவதைத் தடுக்க தண்ணீர் தெளிக்கப்படுகிறது. அதேபோல, கடுங்குளிரில் இருந்து விலங்குகளைப் பாதுகாக்கவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்குமுன், குளிர்கால இரவுகளில் மரக்கட்டைகள் எரிக்கப்பட்டன. -அதனால் எழும் புகையால் மாசு அதிகரித்தது. எனவே, இந்த ஆண்டு ஹீட்டர்கள் பயன்படுத்தப்படுகிறது.குளிர்காலம் விலங்குகள் இனவிருத்திக்கு ஏற்ற பருவம் என்பதால், நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. டில்லி தேசிய உயிரியல் பூங்கா 176 ஏக்கரில் அமைந்துள்ளது. இது, 1952ம் ஆண்டு திறக்கப்பட்டது.
அபாய நிலையில் மாசு
டில்லியில் காற்றின் தரக்குறியீடு நேற்று, 427 ஆக பதிவாகி இருந்தது. இது, அபாயகரமான நிலை என மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.வெப்பநிலை குறைந்த பட்சமாக 5.9 டிகிரி செல்ஷியஸ் பதிவாகியுள்ளது.அண்டை மாநிலங்கள்அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலும் கடுங்குளிர் வாட்டுகிறது. பரித்கோட்டில் வெப்பநிலை 0 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.அமிர்தசரஸ், லூதியானா, பாட்டியாலா, பதன்கோட், பதிண்டா மற்றும் குர்தாஸ்பூர் ஆகிய நகரங்களும் கடுங்குளிரில் நடுங்குகின்றன. இரு மாநிலங்களின் பொதுத் தலைநகரான சண்டிகரில் நேற்று வெப்பநிலை 6.6 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி இருந்தது.ஹரியானா மாநிலத்தில், ஹிசார் நகரில் வெப்பநிலை 1.6 டிகிரி செல்ஷியஸ் பதிவாகி கடுங்குளிர் நிலவியது. சிர்சா, கர்னால், ரோஹ்தக், பிவானி, குருகிராம், குருசேத்ரா, அம்பாலா ஆகிய நகரங்களிலும் கடுங்குளிர் வாட்டுகிறது.