உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் கடும் நிலச்சரிவு; இதுவரை 32 பேர் பலி

காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் கடும் நிலச்சரிவு; இதுவரை 32 பேர் பலி

ஸ்ரீநகர்: காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்தனர்.ஜம்மு - காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக கனமழை பெய்து வருகிறது. கதுவா மாவட்டத்தில் இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக பெய்த பெருமழையில் 10 பேர் உயிரிழந்தனர். ஒரு சில தினங்களில், கிஷ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக, 65 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.இந்த பேரழிவில் இருந்து மீள்வதற்குள், ஜம்மு - காஷ்மீரின் தோடா மாவட்டத்தில், மேக வெடிப்பு காரணமாக நேற்று பெருமழை கொட்டி தீர்த்தது. இந்த இயற்கை சீற்றத்தால் பிரசித்தி பெற்ற வைஷ்ணவி தேவி கோவில் அருகே மிகப் பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். இதனால், வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கத்ராவில் உள்ள வைஷ்ணவ தேவி கோவில் அருகே கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 32 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே ஜம்மு, சம்பா, கத்துவா, ரியாஸி, உதம்பூர், ரஜோரி, ராம்பன், தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் மேகவெடிப்பு, பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படலாம் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

பிரதமர் மோடி இரங்கல்

இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஜம்மு காஷ்மீரில் வைஷ்ணவ தேவி கோவிலுக்கு செல்லும் வழியில் நிலச்சரிவில் சிக்கி 32 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ