வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பேரிடர் காலத்தில் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.. இவர்களது நிலைமையை பார்த்தால் கண்ணீர் வருகிறது.. குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும்
புதுடில்லி: கர்நாடகா, டில்லி மும்பை, கேரளா, குஜராத், மஹாராஷ்டிராவில் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. டில்லியில் கனமழையால் இரண்டு பேரும், மஹாராஷ்டிராவில் எட்டு பேரும் என மொத்தம் 10 பேர் உயிரிழந்தனர்.கர்நாடகாவின் பல பகுதிகளில் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மங்களூர், பம்ப்வெல், பிகர்னகட்டே, கன்கனாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் 110 மிமீ முதல் 210 மிமீ வரை மழை பெய்துள்ளது. மங்களூரில் 170 மி.மீ மழை பெய்துள்ளது. உடுப்பி மாவட்டத்தில் 50 மி.மீ., மழை பதிவாகியுள்ளது. டில்லி முழுவதும் பல்வேறு இடங்களில் திடீர் வானிலை மாற்றம் காரணமாக கனமழை பெய்தது. காற்றில் மரங்கள் வேரோடு சாய்ந்ததால், பல இடங்களில் பயணிகள் சிரமப்பட்டனர். பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.நரேலா, அலிப்பூர், புராரி, பத்லி, மாடல் டவுன், கரவால் நகர், ஆசாத்பூர், பிதம்புரா, டில்லி பல்கலைக்கழகம், சிவில் லைன்ஸ், துவாரகா, மெஹ்ராலி உள்ளிட்ட டில்லியின் பல பகுதிகளில் கனமழை பெய்தது. கனமழையால் மின்சாரம் தாக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.மும்பையில் பலத்த மழைமும்பையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. காலையில் மழை தணிந்தது, லேசான மழை மட்டுமே பெய்தது. பல்வேறு இடங்களில் சாலையில் தேங்கி இருந்த மழை நீர் அகற்றப்பட்டது. தானே, ராய்காட் மற்றும் பால்கர் மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில் பெய்த கனமழையால், மின்னல் தாக்கி எட்டு பேர் உயிரிழந்தனர். ரத்னகிரி மற்றும் ராய்காட் ஆகிய கடலோர மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கையையும், பால்கர், தானே மற்றும் சிந்துதுர்க் மற்றும் புனே, சதாரா மற்றும் கோலாப்பூர் காட் பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையையும் விடுக்கப்பட்டுள்ளது.குஜராத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்தது. குறிப்பாக, சவுராஷ்டிரா பகுதியில் உள்ள கோண்டல், காம்பட், ராஜ்கோட் ஆகிய இடங்களில் கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதேபோல் கேரளாவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. வரும் ஜூன் 18ம் தேதி வரை மாநிலத்தில் கனமழை முதல் மிக கனமழை வரை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பேரிடர் காலத்தில் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் வருத்தம் அளிக்கிறது.. இவர்களது நிலைமையை பார்த்தால் கண்ணீர் வருகிறது.. குடும்பத்தினருக்கு உதவி செய்ய வேண்டும்