உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பீஹாரில் இடியுடன் கனமழை; 48 மணி நேரத்தில் 19 பேர் பலி

பீஹாரில் இடியுடன் கனமழை; 48 மணி நேரத்தில் 19 பேர் பலி

பாட்னா : பீஹாரில் கடந்த இரண்டு நாட்களாக இடி, மின்னலுடன் கொட்டிய கனமழைக்கு, 19 பேர் பலியாகினர். பீஹாரில் வெயில் வாட்டி வந்த நிலையில், வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கடந்த 8ம் தேதி முதல் இங்கு மழை பெய்து வருகிறது.தலைநகர் பாட்னா, முசாபர்பூர், தர்பங்கா, சமஸ்திபூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரு நாட்களாக கனமழை கொட்டியது. இடி, மின்னலுடன் இடைவிடாது பெய்த மழையால், தாழ்வான இடங்களில் தண்ணீர் புகுந்தது.

ஆலங்கட்டி மழை

சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால், பாட்னா உட்பட பல்வேறு இடங்களில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது; ஒரு சில இடங்களில் பொது போக்குவரத்தும் முடங்கியது. புயல் காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பெய்ததால், பீஹாரின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. தர்பங்கா, மதுபனி, சமஸ்திபூர், சீதாமர்ஹி, ஷிவ்ஹார் மற்றும் கிழக்கு சம்பாரண் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த கோதுமை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.தொடர் மழையால் மாம்பழம், லிச்சி விளைச்சலும் பாதிக்கப்பட்டன. இரண்டு நாட்களாக கொட்டிய கனமழைக்கு 19 பேர் பலியானதாக மாநில அரசு அறிவித்துள்ளது.பெகுசாரா மற்றும் தர்பங்காவில் தலா ஐந்து பேர், மதுபனியில் மூன்று பேர், சஹர்சா மற்றும் சமஸ்திபூரில் தலா இரண்டு பேர், லக்கிசாரா மற்றும் கயா மாவட்டத்தில் தலா ஒருவரும் கனமழைக்கு பலியாகியுள்ளனர்.

பயிர்கள் சேதம்

இதில், பெரும்பாலானோர் இடி, மின்னல் தாக்கி பலியானதாக சொல்லப்படுகிறது. உயிரிழந்தவர்களில் பலர் கூலி தொழிலாளிகள். இதற்கிடையே, அடுத்த ஐந்து நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளிலும் நேற்று கனமழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த கனமழைக்கு, அங்கு ஐந்து பேர் பலியாகியுள்ளனர். நர்கி, ஜஸ்ரானா, சித்தார்த் நகர், சீதாப்பூர் உள்ளிட்ட இடங்களில் உயிரிழப்புகள் பதிவாகின. பல இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்ததால் பயிர்களும் சேதமடைந்துள்ளன. மழை பெய்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ளவும், சேதமடைந்த பயிர் விபரங்களை கணக்கிடவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை