மாளிகைபுறத்தில் தேங்காய் உருட்ட ஐகோர்ட் தடை தந்திரி ராஜீவரரு வரவேற்பு
சபரிமலை:சபரிமலை மாளிகைபுறத்து அம்மன் கோவிலை சுற்றி தேங்காய் உருட்டுவதை வழிபாடாக பக்தர்கள் நடத்தி வருகின்றனர்.அதுபோல மஞ்சள் பொடியை கோவிலை சுற்றி துாவுவதும், தேவிக்கு கொண்டு வரும் ஜாக்கெட் துணிகளை கோவில் கோபுரத்தில் துாக்கி வீசுவதும், அதை எடுக்க முண்டியடிப்பதும் போன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடுகின்றனர்.செவி சாய்க்கவில்லை
தேங்காய் காலில் இடிபடுவதுடன் தேங்காயை மிதித்து கீழே விழுந்து பக்தர்கள் காயமடைகின்றனர். இப்படி ஒரு ஐதீகம் சபரிமலையில் இல்லை என, தந்திரியும், மேல் சாந்தியும் தொடர்ந்து எடுத்துக்கூறியும் பக்தர்கள் செவி சாய்க்கவில்லை.இந்நிலையில், சபரிமலை விவகாரங்களை கவனிக்கும் சபரிமலை டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் அனில் கே நரேந்திரன், எஸ்.முரளி கிருஷ்ணா ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:மாளிகைபுறத்து அம்மன் கோவிலை சுற்றி தேங்காய் உருட்டுவதையும், கோவிலை சுற்றி மஞ்சள் பொடி துாவுவதையும் அனுமதிக்க முடியாது. இது, பிற பக்தர்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தி வருகிறது. இப்படிப்பட்ட விஷயங்கள் சபரிமலையில் ஐதீகம் இல்லை என, தந்திரி தெளிவுபடுத்திஉள்ளார்.தந்திரி வரவேற்பு
கோவில் கோபுரத்தின் மீது துணிகளை வீசக்கூடாது. இதை தேவசம்போர்டு கண்டிப்பாக நடைமுறைபடுத்த வேண்டும். பக்தர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவிப்பை தொடர்ந்து ஒலிபெருக்கியில் வெளியிட வேண்டும்.சபரிமலையில் 18ம் படி மற்றும் கோவில் சுற்றுப்புறங்களில் ப்ரீ லான்ஸர்கள் மற்றும் ஆன்லைன் சேனல் போட்டோகிராபர்கள், வீடியோ கிராபர்கள் ஒளிப்பதிவு செய்யக்கூடாது. தேவசம் போர்டின் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே படம் எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.நீதிமன்றத்தின் இந்த உத்தரவை தந்திரி கண்டரரு ராஜீவரரு வரவேற்றுள்ளார்.