சாலைகளில் ஓடும் கழிவு நீர் தலைமை செயலர் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி: கழிவுநீர் மேலாண்மை வசதி இல்லாத தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரி யார்? என கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், டில்லி அரசின் தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, டில்லி மாநகராட்சி ஆணையர் நவம்பர் 15ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும், 22ம் தேதி ஆஜராகவும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டில்லி மாநகரில் மழை நீர் மற்றும் கழிவு நீர் தேங்குவது தொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றம் தாமான முன்வந்து பொதுநல வழக்கை பதிவு செய்தது. நீதிபதிகள் பிரதிபா எம். சிங், மன்மீத் பி.எஸ். அரோரா ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கழிவுநீர் கால்வாய்கள், மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் தொழிற்சாலை கழிவுநீர் குழாய் இணைப்புகள் ஆகியவற்றை கண்காணிப்பது தொடர்பாக அரசின் எந்த துறையும் பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை. டில்லி மாநகரில் பெரும்பாலான தொழிற்சாலைகளில் கழிவுநீர் குழாய் இணைப்புகள் இல்லை என்பது நாளிதழ்களில் வந்துள்ள செய்திகளின் வாயிலாக அப்பட்டமாக தெரிகிறது. அதேபோல, மழைநீர் வடிகால்வாய்கள் கட்டுவதிலும் டில்லி மாநகராட்சி அக்கறை செலுத்தவில்லை. தொழிற்பேட்டைகளின் மேம்பாட்டுக்கு யார் பொறுப்பு என்பதில் டில்லி மாநில தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம், மாநகராட்சி மற்றும் டில்லி அரசின் தொழிற்துறை ஆகியவற்றுக்கு இடையே தெளிவு இல்லை. டில்லி அரசின் தலைமைச் செயலர் ராஜிவ் வர்மா, டில்லி மாநகராட்சி ஆணையர், தொழில்துறை துறை செயலர், டில்லி மாசு கட்டுப்பாட்டுக் குழு தலைவர், டில்லி மாநில தொழிற்துறை மற்றும் உள்கட்டமைப்புத் துறை இயக்குநர் ஆகியோர் கூட்டாக, நவம்பர் 15ம் தேதிக்குள் இது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் நவ. 22ம் தேதி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜராக வேண்டும். அறிக்கையில் எந்த திட்டவட்டமான முடிவும் இல்லையென்றால், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை நிறைவேற்றத் தவறினால், அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் அபராதம் விதிக்க வேண்டியிருக்கும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.