உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / விபத்தில் கண் பார்வை இழந்த சிறுவன்; ரூ.21.8 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

விபத்தில் கண் பார்வை இழந்த சிறுவன்; ரூ.21.8 லட்சம் வழங்க ஐகோர்ட் உத்தரவு

பெங்களூரு : சாலை விபத்தில் இரு கண்களை பறிகொடுத்த 17 வயது சிறுவனுக்கு, ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டியுடன், 21.8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என்று காப்பீடு நிறுவனத்துக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஆந்திர மாநிலம், அனந்தப்பூர் மாவட்டத்தை சேர்ந்த சிவன் கிரண் குமார், 17. கடந்த 2017 மார்ச்சில், தனது பெற்றோருடன் அம்மாவட்டத்தில் உள்ள ஹிரேதுர்பி கிராமத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சம்பவம் நடந்த போது சிறுவனுக்கு 10 வயது.

கர்நாடகா வாகனம்

மதகசிரா - அமராபுரம் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, கர்நாடகா பதிவு எண் உள்ள வாகனம், இவர்கள் பயணித்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், கார் ஓட்டுனர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.லேசான காயத்துடன் பெற்றோர் உயிர் தப்பினர். அவர்களும், படுகாயமடைந்த சிறுவனும், அனந்தப்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனர். பின், பெங்களூரில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இரு கண்களையும் இழந்ததாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், எம்.ஏ.சி.டி., எனும் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் முறையிட்டு, 70 லட்சம் ரூபாய் நஷ்டஈடு கோரினர்.இதை விசாரித்த தீர்ப்பாயம், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 8.3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, சோம்போ பொது காப்பீடு நிறுவனத்துக்கு, 2019ல் உத்தரவிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிறுவனின் பெற்றோரும், காப்பீடு நிறுவனமும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

அமர்வு விசாரணை

இம்மனு, நீதிபதிகள் முத்கல், விஜய்குமார் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், அவர்கள் அளித்த தீர்ப்பு:விபத்து ஏற்படுத்திய வாகனம், அனுமதியின்றி இயங்கி உள்ளது. எனவே, நிவாரணம் வழங்க முடியாது என்று, காப்பீடு நிறுவனம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு முதலில் காப்பீடு நிறுவனம் நிவாரணம் வழங்க வேண்டும். அதன்பின், அந்த வாகனத்தின் உரிமையாளரிடம் பணத்தை வசூலித்து கொள்ளலாம், என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.விபத்தில் சிறுவனின் இரு கண்களும் இழந்துவிட்டதாக, மருத்துவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் உறுதி செய்துள்ளன. அத்துடன் முகத்திலும் பலத்த காயங்கள் ஏற்பட்டு உள்ளன.இதனால் தன் வாழ்நாளில் திருமணம் உட்பட பல சந்தோஷமான தருணங்களை இழக்க நேரிடும். எனவே, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு, 2017 முதல் ஆண்டுக்கு ஒன்பது சதவீத வட்டியுடன், 21.8 லட்சம் ரூபாயை நஷ்டஈடாக வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி