குடிநீரில் கழிவுநீர் கலப்பு உயர் நீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி:மிகவும் மாசு நிறைந்த குடிநீர் சப்ளை செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய, ஜல் போர்டுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வழக்கறிஞர் துருவ் குப்தா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், “கிழக்கு டில்லி யோஜனா விஹார், ஆனந்த் விஹார், ஜாக்ரிதி என்கிளேவ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில், சாக்கடை நீர் கலந்த கருப்பு நிற குடிநீர் ஜூன், 12ம் தேதி முதல் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், மக்கள் உடல்நலனுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜல் போர்டில் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சுத்தமான குடிநீர் வினியோகம் செய்ய டில்லி அரசு மற்றும் ஜல் போர்டுக்கு உத்தரவிட வேண்டும்,”என, கோரிக்கை விடுத்திருந்தார்.மேலும், வினியோகம் செய்யப்பட்ட தண்ணீர் மாதிரியையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷார் ராவ் கெடேலா ஆகியோர், “பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்பட்ட குடிநீரின் நிறத்தைப் பாருங்கள். டில்லி ஜல்போர்டு கிழக்கு டில்லியில் ஆய்வு செய்து, ஜூலை 5ம் தேதி அறைக்கை தாக்கல் செய்ய வேண்டும். ''ஆய்வின் போது அவசர கவனம் தேவைப்படும் குறைகள் கண்டறியப்பட்டால், அதை உடனடியாக சரிப்படுத்த வேண்டும்,” என, உத்தரவிட்டனர்.