உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜூன் 17 வரை எடியூரப்பாவை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை

ஜூன் 17 வரை எடியூரப்பாவை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: 'போக்சோ' வழக்கில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை வரும் 17 ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அதேநேரத்தில் 17 ம் தேதி அவர் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்து உள்ளது. பா.ஜ.,வை சேர்ந்தவர், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 81. பெங்களூரு டாலர்ஸ் காலனியில், இவரது வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டிற்கு கடந்த பிப்ரவரி 2ம் தேதி, சதாசிவ நகரில் வசிக்கும் மமதா, 55, என்ற பெண், தன் 17 வயது மகளுடன் சென்றார். உதவி கேட்டு சென்ற என் மகளை பாலியல் ரீதியாக எடியூரப்பா துன்புறுத்தினார் என்று, சதாசிவநகர் போலீசில், அப்பெண் மார்ச் 14ம் தேதி புகார் அளித்தார். எடியூரப்பா மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்தனர். இவ்வழக்கு சி.ஐ.டி., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.முதல் கட்ட விசாரணையில், புகார் அளித்த பெண், மன நலம் பாதிக்கப்பட்டவர் என்றும், இதுபோன்று ஏற்கனவே 53 முக்கிய பிரபலங்கள் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்ததும் தெரியவந்தது. இதற்கிடையில், புகார் அளித்த மமதா, புற்றுநோய் பாதிக்கப்பட்டு மே 27ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து வழக்கு முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.மேலும், தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி, எடியூரப்பா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையறிந்த மமதாவின் சகோதரர், வழக்கு பதிவு செய்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம்(ஜூன் 12) விசாரணைக்கு ஆஜராகும்படி சி.ஐ.டி., தரப்பில் சம்மன் வழங்கியும், எடியூரப்பா ஆஜராகவில்லை. தான் டில்லியில் இருப்பதாகவும், மூன்று நாட்கள் கால அவகாசம் கேட்டும், சி.ஐ.டி., அதிகாரிகளுக்கு கடிதம் எழுதி இருந்தார். எடியூரப்பாவை கைது செய்ய ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பிக்கும்படி, சி.ஐ.டி., தரப்பில், பெங்களூரு 51வது சிட்டி சிவில் மற்றும் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் கீழமை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் எடியூரப்பாவை கைது செய்ய ஜாமின் இல்லா பிடிவாரன்ட் பிறப்பித்து, உத்தரவிட்டது. இதற்கிடையில், வழக்கை ரத்து செய்யும்படி, உயர் நீதிமன்றத்தில் எடியூரப்பா தாக்கல் செய்த மனு மீது இன்று விசாரணை நடந்தது. அப்போது, எடியூரப்பாவிற்கு எதிராக எந்த நடவடிக்கை எடுக்கவும், கைது செய்யவும் வரும் 17 ம் தேதி வரை தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வரும் 17 ம் தேதி போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என எடியூரப்பாவிற்கு உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

vaiko
ஜூன் 15, 2024 00:29

எடிடியுரப்பாவையும், ப்ரஜ்வாலையும் ஒரு ரூமில் அடைக்க வேண்டும்.


Barakat Ali
ஜூன் 14, 2024 20:22

கர்நாடகாவின் கட்டுமரம் அவர் ...... தொட்டுப்பாருங்க சிவக்குமார் ......


sankaranarayanan
ஜூன் 14, 2024 20:18

என்னய்யா மாநில அரசுகள் தங்களிடம் சி.பி.சி.ஐடி. இருக்கிறது என்ற மமதையினால் யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைதி செய்யலாம் என்ற நோக்கத்தை அறவே ஒழிக்க வேண்டும் இல்லையேல் நாட்டில் அரசியலவாதிகள் ஆண்டவர்கள் ஆளுபவர்கள் அனைவருக்கும் நித்ய கன்டம் பூர்ணாயுசு என்றே பயத்துடன்தான் அழுதுகொண்டேதான் வாழவேண்டும் உச்ச நீதிமண்ரமே இதற்கு ஒரு தீர்வை கொடுக்க வேண்டும்


ஆரூர் ரங்
ஜூன் 14, 2024 19:24

பிளாக் மெயில். சிவகுமாரின் விளையாட்டோ?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை