வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உண்மையை மறைக்க 3 மாசம் தேவைதான்.
''குஜராத்தின் ஆமதாபாதில், 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை விசாரிக்க, மத்திய உள்துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க இந்த குழுவினருக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,'' என, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.குஜராத்தின் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு, 230 பயணியர், இரண்டு விமானிகள், 10 பணியாளர்களுடன் சமீபத்தில் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், 600 - 800 அடி உயரமே பறந்த நிலையில், சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து வெடித்து சிதறியது. இதில், ஒரேயொரு பயணி தவிர, விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்தனர். மேகனி நகரில் உள்ள பி.ஜே.மருத்துவக் கல்லுாரி விடுதி மீது விமானத்தின் முன்பகுதி மோதியது. இதில் விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் இதுவரை, 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கருப்பு பெட்டி
இந்நிலையில், தலைநகர் டில்லியில் நேற்று, தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு கூறியதாவது:ஆமதாபாதில் நிகழ்ந்த விமான விபத்து, ஒட்டு மொத்த நாட்டையே உலுக்கி விட்டது. என் தந்தையும், சாலை விபத்தில் தான் உயிரிழந்தார். அதன் வலியை நான் உணர்கிறேன். விமான விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். விபத்து குறித்த செய்தியை கேள்விப்பட்டதும், உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தேவையான மீட்பு நடவடிக்கைளை மேற்கொண்டோம். குஜராத் அரசும், மீட்பு நடவடிக்கைகளை துரிதமாக செய்திருந்தது.விபத்து நடந்த இடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ள கருப்புப் பெட்டியை, 'டிகோட்' செய்வது விபத்து குறித்த ஆழமான நுண்ணறிவை வழங்கும். இதன்படி, விபத்துக்கு சில நிமிடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது பற்றி அறிய முடியும். இச்சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை செயலர் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. உறுதியான நடவடிக்கை
இந்தக் குழுவினர் விரைவில் விசாரணையை துவங்குவர். மூன்று மாதங்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க குழுவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அறிக்கை கிடைத்ததும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் கண்டு, அவர்களின் குடும்பத்தினரிடம் உடல்களை ஒப்படைக்க மரபணு பரிசோதனை நடந்து வருகிறது. இதில் குஜராத் அரசுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம்.தற்போது சேவையில் உள்ள, 34 போயிங் ரக விமானங்களையும் கூடுதலாக கவனிக்கவும், ஆய்வு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதுகாப்பை மேம்படுத்த எவ்வித தயக்கமுமின்றி தேவையான மற்றும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.விமான போக்குவரத்து துறை செயலர் சமீர் குமார் சின்ஹா கூறுகையில், ''விபத்து தொடர்பான விசாரணை சுமுகமாக நடந்து வருகிறது. விமானத்தை ஓட்டிய விமானி, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, 'மே டே' எனப்படும் அவசர அழைப்பை மேற்கொண்டுள்ளார். ''அதன்பின், விமானத்தை தொடர்பு கொள்ள அதிகாரிகள் முயற்சித்தனர். எனினும் எந்த பலனுமில்லை. விபத்துக்குள்ளான விமானத்தை பொறுத்தவரை, பாரீஸ் - டில்லி - ஆமதாபாத் மார்க்கமாக இயக்கப்பட்டு வந்துள்ளது. முந்தைய செயல்பாடுகளில் எந்தவிதமான குறைபாடுகளும் இல்லை,'' என்றார்.
ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பாக, உத்தவ் சிவசேனா தரப்பைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் ராவத் உள்ளிட்டோர் சில சந்தேகங்களை எழுப்பி இருந்தனர்.இது தொடர்பாக, டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய கலாசாரத் துறை அமைச்சருமான கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியதாவது:அனைத்து விவகாரங்களையும் அரசியலாக்கக் கூடாது. எல்லா பிரச்னைகளையும் அரசியல் கண்ணோட்டத்தோடு பார்ப்பது, சரியாக இருக்காது. சில நேரங்களில், அரசியலுக்கு அப்பாற்பட்டும் நடந்து கொள்ள வேண்டும். மனிதாபிமான உணர்வுகளுடன் சில விஷயங்களை நாம் அணுக வேண்டும். இதைத் தான், சஞ்சய் ராவத்திடமும் எதிர்பார்க்கிறேன். ஆமதாபாத் விமான விபத்து மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இவ்வாறு அவர் கூறினார்.- நமது டில்லி நிருபர் -
உண்மையை மறைக்க 3 மாசம் தேவைதான்.