கடத்தப்பட்ட கார்கள் பறிமுதல்
புதுடில்லி:டில்லியில் சொகுசு கார்களை திருடி குறைந்த விலைக்கு விற்ற, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். தலைநகர் டில்லியில், ஒதுக்குபுறமாக நிறுத்தியிருந்த எட்டு கார்கள் திருடு போயின. போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். டில்லி மற்றும் மேற்கு வங்கத்தின் சிலிகுரியில், கார் திருடும் கும்பல் நடமாட்டம் குறித்து, டில்லி போலீசுக்கு தகவல் கிடைத்தது. சிலிகுரி நகருக்கு சென்ற தனிப்படை போலீசார், டில்லியில் திருடு போன ஒரு சொகுசு காரை பறிமுதல் செய்தனர். டில்லியில் திருடப்பட்ட அந்த கார், மேற்கு வங்கத்தில் மிகக் குறைந்த விலைக்கு விற்கப்பட்டிருந்தது.இதேபோல, நான்கு கார்கள் சிலிகுரியில் கைப்பற்றப்பட்டன. அந்தக் கார்களை டில்லியில் இருந்து கடத்திய மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த கைமின்லெப் ஹோகிப் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த முஹமது ஜானி, 42, முஹமது தில்தார், 36, அர்ஜுன், 29, ஆகியோரை கைது செய்தனர். இந்தக் கும்பல், 20 - 23 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை, 2 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளனர். இந்தக் கும்பலிடம் நடத்திய விசாரணை அடிப்படையில், மேற்கு டில்லியை சேர்ந்த நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது.