சபரிமலையில் அலைமோதிய கூட்டம்
சபரிமலை:கேரள மாநிலம், சபரிமலையில், தற்போது ஐப்பசி மாத பூஜைகள் நடக்கின்றன. அடுத்த மாதம் மண்டல பூஜை சீசன் துவங்க உள்ள நிலையில், தற்போதைய மாத பூஜையில் துவக்கம் முதலே பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஐப்பசி மூன்றாம் நாளான நேற்று ஆன்லைனில், 55,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்திருந்தனர்.நேற்று அதிகாலை நடை திறந்த போது, அவர்களின் நீண்ட வரிசை மர கூட்டம் வரை காணப்பட்டது. 18 படிகளில் ஏற நீண்ட நேரம் காத்திருந்தனர். மதியம், 1:00 மணிக்கு உச்ச பூஜை நடந்தபோது நீண்ட வரிசை இருந்ததால் பூஜைக்கு பின்னர் நடை அடைக்காமல் தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டிருந்தது.மதியம், 3:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டு மீண்டும் மாலை, 4:00 மணிக்கு நடை திறந்து பக்தர்களுக்கு தரிசன வசதி செய்யப்பட்டது. 18 படிகளில் ஏறுவதற்கு, 10:00 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருந்தது. இந்நிலையில், மண்டல, மகர விளக்கு காலத்தில் தினமும், 80,000 பேருக்கு முன்பதிவு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், இந்தாண்டும் சீசனில் சபரிமலையில் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதில் சிக்கல் எழுந்து உள்ளது.