உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சார்மாடி வனப்பகுதியில் தற்கொலை உடலை மீட்டு கொடுக்கும் மனிதாபிமானி

சார்மாடி வனப்பகுதியில் தற்கொலை உடலை மீட்டு கொடுக்கும் மனிதாபிமானி

சிக்கமகளூரின் மூடிகெரேயில் இருந்து பனகல் வழியாக, தட்சிண கன்னடாவின் பெல்தங்கடி உஜ்ரே கிராமத்தை, சார்மாடி வனப்பகுதி சாலை இணைக்கிறது.பச்சை, பசேலென காணப்படும் இந்த வனப்பகுதி சாலை, மழைக்காலத்தில் மிகவும் ரம்மியமாக காட்சி அளிக்கும். பாறைகளில் இருந்து திடீர் அருவியும் உருவாகும். இதனால் இந்த வனப்பகுதி சாலையை பயன்படுத்த வாகன ஓட்டிகள் விரும்புவர்.அழகுக்கு மட்டும் இந்த சார்மாடி வனப்பகுதி, பெயர் பெற்றது இல்லை. தற்கொலை செய்து கொள்வதற்கும் தான். குடும்ப பிரச்னை, கடன் தொல்லை, மன உளைச்சலால் சார்மாடி வனப்பகுதிக்கு வந்து, தற்கொலை செய்து கொள்வோரும் உண்டு.மலை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கில் குதித்து தற்கொலை செய்கின்றனர். கொலை செய்யப்படுவோர் உடல்களையும் பள்ளத்தாக்கில் போட்ட, சம்பவங்களும் நடந்துள்ளன. பள்ளத்தாக்கில் இருந்து உடலை மேலே துாக்கி வருவது மிகவும் சவாலாக இருக்கும். இந்த பணியை மிக சுலபமாக செய்கிறார் ஒருவர்.

போலீஸ் உதவி

மூடிகெரே அருகே பனகல் கிராமத்தில் வசிப்பவர் ஆரிப், 48. சார்மாடி மலையில் தற்கொலை செய்வோர், கொலை செய்து வீசப்படும் உடல்களை மீட்டு வரும் பணிகளை, 15 ஆண்டுகளாக செய்து வருகிறார். உடல்களை மீட்டு வந்த பின், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் இருந்து, பணம் வாங்குவது இல்லை.சவாலான பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் ஆரிப் கூறியதாவது:எனது தந்தை ஆயுர்வேத மருத்துவராக இருந்தவர். 15 ஆண்டுகளுக்கு முன்பு அவர் இறந்துவிட்டார். பின், பனகல்லுக்கு குடிபெயர்ந்தோம். நான், என் மனைவி, மகளுடன் வசிக்கிறேன்.சார்மாடி வனப்பகுதியில் தற்கொலை செய்வோர், கொலை செய்து வீசப்படும் உடல்களை மீட்டுக் கொடுக்கிறேன். எனக்கு போலீஸ், தீயணைப்பு படையினர் உதவி செய்கின்றனர்.மீட்டுக் கொடுக்கும் உடல்களுக்கு பணம் வாங்குவது இல்லை. உயிரிழந்தோர் குடும்பத்தினராக பார்த்து ஏதாவது கொடுத்தால் வாங்கிக் கொள்கிறேன்.சார்மாடி வனப்பகுதியில் இருந்து, இதுவரை 40 உடல்களை மீட்டு உள்ளேன். தடினமான கயிறை எடுத்துக் கொண்டு, பள்ளத்தாக்கில் இறங்கி விடுவேன். மரம், பாறைகளுக்கு இடையில் சிக்கி இருக்கும், உடல்களை வெளியே இழுத்து, கயிறை வைத்து கட்டுவேன். பின், மேல்பகுதியில் இருந்து போலீசார், தீயணைப்பு படையினர் இழுத்து மேலே துாக்குவர்.

சிறுவன் உயிர்

என்னிடம் ஒரு ஆம்புலன்ஸ் உள்ளது. அதை எனது இரண்டாவது இதயமாக பார்க்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சைக்கிள் ஓட்டியபோது கீழே விழுந்த சிறுவன் முதுகில், இரும்பு கம்பி குத்தியது. மூடிகெரேயில் இருந்து மங்களூருக்கு 110 கி.மீ., துாரத்தை ஒரு மணி நேரம் 20 நிமிடத்தில் ஆம்புலன்சில் கடந்து சென்று, அந்த சிறுவனை சரியான நேரத்தில், மருத்துவமனையில் அனுமதித்து உயிரை காப்பாற்றினேன்.ஆம்புலன்ஸ் ஓட்டும்போது நான் பிரேக் அடிப்பது கிடையாது. கியரில் வேகத்தை குறைக்கிறேன். வீடுகளுக்குள் புகுந்து விடும் பாம்புகளையும் பிடித்துக் கொடுக்கிறேன். சமூக சேவையாக தான் அனைத்தையும் செய்கிறேன். வாடகை வீட்டில் தான் இன்று வரை வசிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.ஆரிப்பை தொடர்பு கொள்ள நினைப்போர் 94482 29532 என்ற மொபைல் எண்ணில் அழைக்கலாம் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ