மேலும் செய்திகள்
மூதாட்டி அடித்துக் கொலை
24-Aug-2025
லக்னோ: உத்தர பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக, பரபரப்பான மார்க்கெட்டில் வைத்து மனைவியை சுட்டுக் கொன்ற கணவனை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். உ.பி.,யின் கோரக்பூரைச் சேர்ந்தவர் விஸ்வகர்மா சவுஹான். இவர் மனைவி மம்தா. இருவருக்கும், 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளாக கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் விஸ்வகர்மாவை பிரிந்த மம்தா, தன் 13 வயது மகளுடன் ஷாபூர் பகுதியில் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்; தனியார் நிறுவனம் ஒன்றிலும் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், ஷாபூர் மார்க்கெட் பகுதியில் உள்ள போட்டோ ஸ்டுடியோவுக்கு மம்தா நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வந்தார். அங்கிருந்து வெளியே வந்த அவரை, விஸ்வகர்மா தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில், சண்டை முற்றியதில், ஹெல்மெட்டில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து மம்தாவை நோக்கி விஸ்வகர்மா சுட்டார். இதில், கழுத்து மற்றும் மார்பில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். அங்கிருந்தவர்கள் சேர்ந்து மம்தாவை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, துப்பாக்கிச் சூடு நடத்திய விஸ்வகர்மா, போலீசார் வரும் வரை சம்பவ இடத்திலேயே நின்றிருந்தார். 25 நிமிடங்களுக்கு மேலாக நின்றிருந்த அவர், 'மம்தாவால் தொடர் தொந்தரவுக்கு ஆளானேன்' என பலமுறை கூறியபடி இருந்தார். அவரை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Aug-2025