கடைகள், உணவகங்களுக்கு கட்டுப்பாடு; ஹைதராபாத் போலீஸ் கறார்!
ஹைதராபாத்; ஹைதராபாதில் கடைகள், நிறுவனங்கள் எந்த நேரங்களில் செயல்பட வேண்டும் என்று புதிய வழிகாட்டுதல்களை போலீசார் வெளியிட்டு உள்ளனர்.பெரிய நகரங்களில் முக்கியமானதாக கருதப்படும் ஹைதராபாதில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள் போன்றவை கட்டுபாடின்றி பெரும்பாலான நேரங்களில் திறந்து வைக்கப்பட்டு இருப்பதாக புகார்கள் பல தருணங்களில் எழுந்தன. இதை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்துள்ளனர்.முக்கியமாக, கடைகள், நிறுவனங்கள் எந்த நேரத்தில் திறந்து, எப்போது அடைக்க வேண்டும் என்ற புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டு உள்ளனர். அதன்படி, கடைகள், நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்து வைத்திருக்கலாம்.ஓட்டல்கள், உணவகங்கள் அதிகாலை 5 மணி முதல் அடுத்த நாள் நள்ளிரவு 1 மணி வரை வியாபாரம் செய்து கொள்ளலாம். மேலும், தாபாக்கள், ஐஸ்கீரிம் விற்பனை நிலையங்கள், பேக்கரிகள், டிபன் சென்டர்கள், காபி கடைகள், டீக்கடைகள், பான் கடைகள் போன்றவை நள்ளிரவு 1 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.ஹைதராபாத் பெருநகர கார்ப்பரேஷன் எல்லைக்குள்ளும், புற பகுதிகளிலும் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கலாம். பார்கள் மூலம் மதுபானங்கள் விற்கும் கடைகள் வார நாட்களில் நள்ளிரவு 12 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் நள்ளிரவு 1 மணி வரையும் செயல்படலாம்.மேற்கண்ட வழிகாட்டுதல்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.