ரூ.6.42 லட்சம் கோடியில் பிரம்மபுத்ராவில் நீர்மின் திட்டம்
புதுடில்லி : வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், அசாம் வழியாக பிரம்மபுத்ரா நதி பாய்கிறது. இந்த நதியில் மிகப்பெரிய நீர்மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கு முன் இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை நாடு முழுதும் அனுப்ப விரிவான மின் வினியோக திட்டத்தை உறுதி செய்வது அவசியம். அதை கருதி, பிரம்மபுத்ரா ஆற்றில் இருந்து 65 ஜிகாவாட் மின்சாரம் வினியோகிக்க 6.42 லட்சம் ரூபாய்க்கு மாஸ்டர் திட்டத்தை மத்திய மின்சார ஆணையம் தயாரித்துள்ளது. இது குறித்து மத்திய மின் துறை செயலர் பங்கஜ் அகர்வால் கூறியதாவது:
நீர்மின் உற்பத்தி பசுமை மின் துறையில் முக்கிய ஆதாரமாக உள்ளது. பிரம்மபுத்ராவில் உற்பத்தி செய்யப்படும் நீர்மின்சாரத்தை வினியோகிப்பதற்கான மாஸ்டர் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி 2035க்குள் ஆற்றுப்பகுதியின் 12 இடங்களில் இருந்து மின்சாரம் எடுத்துச் செல்ல 10,000 சர்க்யூட் கிலோ மீட்டர் நீளத்துக்கு மின்தடம் பதிக்க வேண்டும். இங்கு நீர்மின் நிலையங்களை உருவாக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கு இது தெளிவான வழிகாட்டியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.