கோவில் சுவர்களில் ஐ லவ் முகமது :உத்தர பிரதேசத்தில் மீண்டும் பதற்றம்
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
அலிகார்: உத்தர பிரதேசத்தில், ஹிந்து கோவில்களின் சுவர்களில், 'ஐ லவ் முகமது' என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது, மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு கான்பூரில் உள்ள ராவத்பூரில், மிலாது நபியையொட்டி கடந்த மாதம், 'ஐ லவ் முகமது' என்ற வாசகம் அச்சிடப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு, ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து வழக்குப் பதியப்பட்டது. இதை கண்டித்து, பரேலி மாவட்டத்தில் முஸ்லிம்கள் சார்பில் நடந்த பேரணியில் வன்முறை வெடித்தது; பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. இது தொடர்பாக, உள்ளூர் முஸ்லிம் மதகுரு தவுகீர் ரசா கான், அவரது கூட்டாளி நதீம் உட்பட, 40க்கும் மேற்பட்ேடார் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், அலிகார் மாவட்டத்தின் புலகர்கி, பகவான்பூர் ஆகிய கிராமங்களில் உள்ள நான்கு கோவில்களின் சுவர்களில், 'ஐ லவ் முகமது' என்ற வாசகத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், 'ஸ்பிரே பெயின்ட்'டால் நேற்று அதிகாலை எழுதி உள்ளனர். இதையறிந்த அப்பகுதியில் வசிக்கும் ஹிந்துக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், கோவில் சுவர்களில் எழுதப்பட்டிருந்த, 'ஐ லவ் முகமது' வாசகத்தை அழித்தனர். அலிகார் மாவட்ட எஸ்.எஸ்.பி., நீரஜ் குமார் ஜடான் கூறியதாவது: புலகர்கி, பகவான்பூர் கிராமங்களில் உள்ள நான்கு கோவில்களில், 'ஐ லவ் முகமது' என எழுதப்பட்டிருந்தது. இது குறித்து தகவல் கிடைத்ததும், போலீசார் ஆய்வு செய்து, சட்டம்- - ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, கோவில்களில் எழுதப்பட்டிருந்த வாசகத்தை அழித்தனர். சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் மர்ம நபர்கள் இதை செய்துள்ளனர். அவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம். புலகர்கி, பகவான்பூர் கிராமங்களில் நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.