ஹைட்ரஜன் குண்டு வீசுவேன்: ராகுல் பொறுப்பாக பேசுங்கள்: பா.ஜ.,
'நாட்டில் நடக்கும் தேர்தல்களை, சம்பந்தமே இல்லாமல் அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டுகளுடன் தொடர்புபடுத்தி ராகுல் பேசியிருப்பது பொறுப்பற்ற செயல். அவரது பேச்சு கண்டனத்திற்குரியது' என, பா.ஜ., குற்றஞ்சாட்டி உள்ளது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், 'வாக்காளர் உரிமை பேரணி' என்ற பெயரில், பீஹாரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் நிறைவு நாளான நேற்று, பாட்னாவில் நடந்த பேரணியில் அவர் பேசியதாவது: ஓட்டு திருட்டு விவகாரத்தில் உண்மை தெரிய வேண்டும் என்பதற்காகவே, இந்த பிரமாண்ட பயணத்தை நடத்தினோம். இதற்கு மிகப்பெரிய வரவேற்பு மக்கள் மத்தியில் கிடைத்துள்ளது. 'ஓட்டு திருட்டு, நாற்காலி திருட்டு' என நாங்கள் எழுப்பிய கோஷங்கள், களத்தில் புயலைக் கிளப்பியுள்ளன. ஓட்டு திருட்டு என்ற கோஷம் நாலாபுறங்களிலும் எதிரொலிக்கத் துவங்கிவிட்டது; சீனாவையும் எட்டிவிட்டது. பா.ஜ.,வினருக்கு ஒன்றை கூறிக் கொள்கிறேன். அணுகுண்டை விட ஒரு பெரிய குண்டை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அதன் பெயர் ஹைட்ரஜன் குண்டு. பா.ஜ.,வினர் தயாராகிக் கொள்ளுங்கள், ஹைட்ரஜன் குண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நான் உறுதியாகச் சொல்கிறேன். நாங்கள் வீசும் ஹைட்ரஜன் குண்டுக்கு பின், தன் முகத்தைக் கூட காட்ட முடியாத நிலைக்கு நரேந்திர மோடி தள்ளப் படுவார். இவ்வாறு அவர் பேசினார். இதற்கு பதிலடி தரும் விதமாக, பா.ஜ., மூத்த எம்.பி., ரவிசங்கர் பிரசாத் டில்லியில் நேற்று கூறியதாவது: பார்லிமென்ட் உள்ளேயும், வெளியேயும் ராகுலின் பேச்சை கேட்கும் போதெல்லாம், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதே தெரியவில்லை. அதைப் புரிந்துகொள்ளவே பல மணி நேரம் எடுக்கிறது. அணுகுண்டு மற்றும் ஹைட்ரஜன் குண்டு ஆகியவற்றுக்கும், நம் நாட்டில் நடக்கும் தேர்தல்களுக்கும் என்ன தொடர்பு இருந்துவிட முடியும்? ராகுலின் பேச்சு முற்றிலும் கண்டனத்திற்குரியது. அவர் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டு, தரம் தாழ்ந்து பேசுவதுதோடு மட்டுமல்லாது, நாடு முழுதும் உள்ள வாக்காளர்களையும் அவமானப்படுத்தத் துவங்கிவிட்டார். இவ்வாறு அவர் கூறினார் - நமது டில்லி நிருபர் - .