உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வரின் காலில் விழுவதற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தடை

முதல்வரின் காலில் விழுவதற்கு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தடை

தெலுங்கானா முதல்வர் காங்கிரசைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரத், முதல்வரின் காலை தொட்டு வணங்கினார்.ஒரு அரசியல்வாதியின் காலில், நன்கு படித்த அதிகாரி ஒருவர் விழலாமா என்று விமர்சனங்கள் எழுந்தன. இந்த சம்பவம், முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்ணியம்

இதையடுத்து, இனி எந்த நிகழ்ச்சியிலும், ஐ.ஏ.எஸ்., உட்பட அரசு அதிகாரிகள், முதல்வரின் காலில் விழக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக அரசு அதிகாரிகளுக்கு, தலைமை செயலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். பதவியின் கண்ணியத்தை காக்கும் வகையில், இனி முதல்வரின் காலில் அதிகாரிகள் விழக்கூடாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.முதல்வரின் காலில் விழுவது என்பது மரியாதை அல்லது மதிப்பை காட்டுவதாக இருந்தாலும், அதிகாரிகள் மீது பொதுமக்களுக்கு தவறான எண்ணம் ஏற்படுத்திவிடும்.அதனால், இனி காலில் விழ வேண்டாம் என அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி சரத், இதற்கு முன், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் முதல்வராக இருந்தபோதும், அவரது காலை தொட்டு வணங்கியுள்ளார்.

மரியாதை

அதற்கு முன், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமாக இருந்தபோது, தெலுங்கு தேசத்தின் தலைவர் சந்திரபாபு நாயுடு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது அவரது தனிப்பட்ட செயலராக சரத் இருந்தார். அப்போது, சந்திரபாபுவின் காலை தொட்டு வணங்கினார். அந்த நேரத்தில், சபரிமலைக்கு செல்வதற்காக விரதத்தில் சரத் இருந்தார். சந்திரபாபு நாயுடுவின் உருவத்தில் அய்யப்பனை பார்த்ததாகவும், அதனால் காலில் விழுந்ததாகவும் அப்போது அந்த அதிகாரி கூறினார்.இது போன்று, ஆந்திரா, தெலுங்கானாவில் பல சம்பவங்கள் இதற்கு முன் நடந்துள்ளன. என்.டி. ராம ராவ் சினிமாவில் இருந்தபோது, ராமர், கிருஷ்ணர் வேடங்களில் நடித்துள்ளார். அதனால், மக்கள் அவரை எங்கு பார்த்தாலும் காலில் விழுவர். அவர் முதல்வராக இருந்தபோதும் இது தொடர்ந்தது.ஆனால், தற்போது தங்களுக்கு வேண்டிய காரியத்தை நிறைவேற்றிக் கொள்ளவே அரசியல்வாதியின் காலில் அதிகாரிகள் விழுவதாக பேசப்படுகிறது.அரசியல்வாதிகளும், மக்கள், தொண்டர்கள், அதிகாரிகள் தங்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்பதை விரும்புகின்றனர்.காலில் விழுவது என்பது நம் பாரம்பரியத்தின்படி சரிதான். ஆனால், யாருடைய காலில், எந்த இடத்தில், எந்த நேரத்தில், எதற்காக விழுகிறோம் என்பதில் தான் வித்தியாசம் உள்ளது. - நமது சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Mecca Shivan
மே 23, 2025 06:34

அப்பா குடும்ப காலில் விழுந்தே கிடைக்கும் அதிகாரிகளை என்ன சொல்வது ?


Kasimani Baskaran
மே 23, 2025 04:09

பெற்றோர் காலில் விழுந்தால் பரவாயில்லை.. மற்றவர்கள் காலில் விழுவது அபத்தம்... சுத்தமான பயித்தியக்காரத்தனம்.


சண்முகம்
மே 23, 2025 02:25

தமிழ் நாட்டில்.....


சமீபத்திய செய்தி