இதெல்லாம் சட்டவிரோதம்; டில்லி முதல்வர் அதிஷி தாக்கு
புதுடில்லி: டில்லி மாநகராட்சியில் நடந்த நிலைக்குழு தேர்தல், 'சட்டவிரோதமானது, அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது' என டில்லி முதல்வர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.டில்லி மாநகராட்சி உள்ளாட்சி நிலைக்குழுவின் உறுப்பினருக்கான தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம், பெரும்பான்மையுடன் நிலைக்குழுவில் பா.ஜ., ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பு ஏற்பட்டது. இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் இன்று(செப்.,28) அதிஷி கூறியதாவது: நேற்று பா.ஜ., நடத்திய தேர்தல் சட்டவிரோதமானது. அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது. இது ஜனநாயக விரோதமானது. டில்லி மாநகராட்சியில் நடந்த நிலைக்குழு தேர்தலை ரத்து செய்யுமாறு, சுப்ரீம் கோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி சார்பில் மனுத்தாக்கல் செய்ய உள்ளோம். டில்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சட்டம் 1957ன் கீழ், மாநகராட்சி நடத்தும் தேர்தலுக்கு பல விதிகள், சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த விதிமுறைகளின் படி, நிலைக்குழு உறுப்பினர்கள் என்பது மாநகராட்சி கூட்டத்தில் தேர்வு செய்யப்படுவர். டில்லி துணைநிலை கவர்வர் மற்றும் அதிகாரிகளின் அதிகாரங்களை தவறாக பயன்படுத்தி தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.