உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  உ.பி.,யில் 10 குழந்தைகள் பலியான சம்பவத்தில்... 3 கட்ட விசாரணை!  12 மணி நேரத்துக்குள் அறிக்கை கேட்கிறது அரசு

 உ.பி.,யில் 10 குழந்தைகள் பலியான சம்பவத்தில்... 3 கட்ட விசாரணை!  12 மணி நேரத்துக்குள் அறிக்கை கேட்கிறது அரசு

ஜான்சி: உத்தர பிரதேசத்தின் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில், 10 குழந்தைகள் பலியானது தொடர்பாக மூன்று கட்ட விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு நிவாரணத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமிபாய் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள் பிரிவில், நேற்று முன்தினம் இரவு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில், தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த 10 குழந்தைகள் பலியாகின. இதைத் தவிர அங்கிருந்த, 16 குழந்தைகள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு நோய்களுக்காக சேர்க்கப்பட்டிருந்த அந்த, 16 குழந்தைகள் உடனடியாக வேறு பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும், தீ விபத்தால் காயமோ, மூச்சுத் திணறலோ ஏற்படவில்லை என, அரசு தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.தீ விபத்து நடந்த போது, குழந்தைகள் சிகிச்சை பிரிவில், 52 குழந்தைகள் இருந்ததாகவும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தில் பந்தகல்கண்ட் பிராந்தியத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான இதில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, மூன்று கட்ட விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.மண்டல அதிகாரி மற்றும் டி.ஜி.பி., ஆகியோர், 12 மணி நேரத்துக்குள் விபத்து தொடர்பான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.இதைத் தவிர, தீ விபத்துக்கான காரணம் குறித்து தீயணைப்புத் துறையும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தவிர, மாஜிஸ்திரேட் தலைமையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தாருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க, முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து, தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

காங்கிரஸ் வலியுறுத்தல்!

காங்.,கைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த சம்பவம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தி, இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உத்தர பிரதேசத்தில் ஒன்றுக்குப் பின் ஒன்றாக இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது, மாநில அரசின் நிர்வாகத்திறன் குறித்து கேள்வி எழுப்புகிறது' என, குறிப்பிட்டுள்ளார்.

சொந்த குழந்தையை இழந்தார்

ஜான்சி மருத்துவமனை குழந்தைகள் பிரிவில் நேற்று முன்தினம் இரவு தீ விபத்து ஏற்பட்டபோது, அதன் வராண்டாவில் படுத்திருந்த யாகும் மன்சூரி, உடனடியாக ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே சென்றார். அங்கிருந்த சில குழந்தைகளை அவர் காப்பாற்றினார். இதற்கிடையே தீ வேகமாக பரவியதுடன், புகை சூழ்ந்ததால், அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.அந்தப் பிரிவில் இருந்த, தன் இரண்டு பெண் குழந்தைகளை அவரால் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனை வளாகத்தில் நேற்று காலை, அவர் தன் குழந்தைகளை காப்பாற்ற முடியாத இயலாமையை கூறி கண்ணீருடன் கதறியது, உருக்கமாக இருந்தது.இந்த தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த குழந்தைகள் அனைத்தும் சமீபத்தில் பிறந்தவை. அதில் சில குழந்தைகள், குறை பிரசவத்தில் பிறந்தவை. உயிர்இழந்த குழந்தைகளின் இளம் தாய்கள், மருத்துவமனை வளாகத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுதது, அந்தப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ