திறமையற்ற முதல்வர் விஜயேந்திரா சாடல்
பல்லாரி: ''கர்நாடகாவில் திறமையற்ற முதல்வரால், திறமையற்ற அரசு நடக்கிறது,'' என மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.பல்லாரியின் சண்டூரில் நேற்று விஜயேந்திரா அளித்த பேட்டி:கர்நாடகாவில் திறமையற்ற முதல்வரால், திறமையற்ற அரசு நடக்கிறது. 15 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல்வரை, திறமையற்றவர் என எப்படி சொல்லலாம் என்று நீங்கள் கேட்கலாம். இதே கேள்வியை, என்னிடம் கேட்பதற்கு பதிலாக, ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்களிடம் கேளுங்கள், பதில் கிடைக்கும்.சட்டசபை தேர்தலின் போது, பா.ஜ., மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறினர்; காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி பணிகள் செய்வோம் என்றனர். ஆனால், இன்று மக்கள் கண்ணில் மண்ணை துாவி உள்ளனர்.விவசாயிகள் நிலம், வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்று கூறி, நிலத்தை அபகரித்து வருகின்றனர். விவசாயிகளை பாதுகாக்க வேண்டிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் மவுனமாக உள்ளனர்.அஹிந்தா முதல்வர், சிறுபான்மையினரை ஒப்பிட்டு பேசுகிறார். ஆனால் கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளார். 'முடா' வழக்கில், முதல்வர் சித்தராமையா தான், முதலில் குற்றம் சாட்டப்பட்டவர். ஆனால் அவரோ, 'நான் நிரபராதி' என்று கூறி வருகிறார். பா.ஜ., சொல்வதை விட்டுவிடுங்கள். கர்நாடக உயர் நீதிமன்றம், இத்தகவலை தெரிவித்துள்ளது.காங்கிரஸ் கூட்டங்களுக்கு 500 ரூபாய் கொடுத்து, ஆட்களை அழைத்து வந்துள்ளனர். இருந்தும் முதல்வரின் பிரசார கூட்டத்திலும், பெரும்பாலான இருக்கைகள் காலியாக இருந்தன. மூன்று சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.