ராணுவ தளவாட உற்பத்தி ரூ.1.27 லட்சம் கோடியாக அதிகரிப்பு
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி, 2023 - 24ம் நிதியாண்டில், 1.27 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.இது குறித்து, பா.ஜ., மூத்த தலைவரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங் நேற்று வெளியிட்ட அறிக்கை:அனைத்து துறைகளிலும், நம் நாடு தன்னிறைவு அடைய வேண்டும் என்பதற்காக, 'மேக் இன் இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார். கடந்த 10 ஆண்டுகளில், ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது, நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களையும், தளவாடங்களையும் நம் ஆயுதப் படைகள் பயன்படுத்தி வருகின்றன. மேலும், 90 நாடுகளுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 2023 - -24ம் நிதியாண்டில், நம் நாட்டின் ராணுவ தளவாட உற்பத்தி, 1.27 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டார். சமீபத்திய ஆண்டுகளில், உள்நாட்டு ராணுவ உற்பத்தியை ஊக்குவிக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சீன எல்லையில் ராணுவ தயார்நிலையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படுகிறது. கடந்த 2023- - 24ம் நிதியாண்டில், முதன்முறையாக ராணுவ ஏற்றுமதி 21,000 கோடி ரூபாயைத் தாண்டியது. இதை ஐந்து ஆண்டுகளில், 50,000 கோடி ரூபாயாக உயர்த்த ராணுவ அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.