சிக்கமகளூரில் அதிகரிக்கும் குரங்கு காய்ச்சல்
சிக்கமகளூரு : சிக்கமகளூரில் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்நோயால், மக்கள் கிலி அடைந்துள்ளனர். சுகாதாரத்துறைக்கும் தலைவலி ஏற்பட்டுள்ளது.கோடைகாலத்தில், மலைப்பகுதி மாவட்டங்களில் குரங்கு காய்ச்சல் பரவுவது வழக்கம். ஆனால் இம்முறை கோடைகாலத்துக்கு முன்பே, குரங்கு காய்ச்சல் பரவுகிறது. சிக்கமகளூரில் நோய் வேகமாக பரவுகிறது. இம்மாவட்டத்தில் 18 பேருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.என்.ஆர்.புரா தாலுகாவில், நேற்று ஒரே நாளில் நால்வருக்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்டது. இவர்கள் கொப்பா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். கோடைகாலம் துவங்கிய பின், நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என, சுகாதாரத்துறை அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.அதிகாரிகள் கூறியதாவது:கோடைகால ஆரம்பத்துக்கு முன்பே, குரங்கு காய்ச்சல் அதிகரிப்பது கவலை அளிக்கிறது. இதை கட்டுப்படுத்த, சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.இறந்த குரங்குகளில் இருந்து, மனிதர்களுக்கு பரவுகிறது. தேவையின்றி மக்கள் வனப்பகுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். வனப்பகுதிகளில் குரங்குகள் இறந்திருந்தால், உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.குரங்கு காய்ச்சலுக்கு குறிப்பிட்ட மருந்துகள் இல்லை. நோய் பரவாமல் தடுப்பது மட்டுமே, இதற்கு ஒரே வழி. மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது.கால்நடைகளை வனப்பகுதிகளில் மேய விட வேண்டாம். வனப்பகுதியில் இருந்து வந்தவுடன், உடைகளை வென்னீரில் நனைத்து விட்டு, குளித்துவிடுங்கள்.குரங்கு காய்ச்சல் கண்டுபிடிக்கப்பட்ட கிராமங்களுக்கு, சுகாதார அதிகாரிகள் செல்கின்றனர். மக்களின் ரத்த மாதிரியை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்புகின்றனர். குரங்கு காய்ச்சல் பரவாமல், ஏற்கனவே தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.