உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்துக்கு பின் விலையை குறைக்காமல் பொருட்களின் அளவை அதிகரிப்பது மோசடி: ஐகோர்ட்

ஜி.எஸ்.டி., சீர்திருத்தத்துக்கு பின் விலையை குறைக்காமல் பொருட்களின் அளவை அதிகரிப்பது மோசடி: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., குறைப்புக்குப் பின், பொருட்களின் விலையை குறைக்காமல், அளவை அதிகரித்து விற்பனை செய்வது மோசடி செயல்' என, டில்லி உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுதும் ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவைகள் வரி குறைக்கப்பட்டு, கடந்த மாதம் 22ம் தேதி அமலுக்கு வந்தது. லாப தொகை நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., தற்போது 5 மற்றும் 18 சதவீத அடுக்குகளில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், மளிகை உட்பட பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்துள்ளன. முன்னதாக 2017ல் 28 சதவீத ஜி.எஸ்.டி.,யில் இருந்த பொருட்கள், 18 சதவீத வரிக்கு மாற்றப்பட்டன. அப்போது, 'ஹிந்துஸ்தான் யூனிலீவர்' நிறுவனம் விலையை குறைக்காமல், பொருளின் அளவை உயர்த்தி, எம்.ஆர்.பி., எனப்படும் அதிகபட்ச சில்லரை விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் விற்பனை செய்தது. வணிக நிறுவனங்களின் விலையை கட்டுப்படுத்தும் என்.ஏ.பி.ஏ., எனப்படும் லாபநோக்கமற்ற ஆணையத்திடம் இந்த மோசடி குறித்து முறையிடப்பட்டது. இது குறித்து விசாரித்த அந்த ஆணையம், 2018ல், வரி குறைப்பின் பலன் நுகர்வோருக்கு சேர வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், எம்.ஆர்.பி., விலையை குறைக்காமல் விற்ற லாபத் தொகையை நுகர்வோர் நல நிதியில் சேர் க்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் சார்பில், டில்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு நீதிபதிகள் பிரதீபா எம்.சிங் மற்றும் ஷெயில் ஜெயின் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைக்கப்பட்ட பிறகும், அதே எம்.ஆர்.பி., விலைக்காக, பொருட்களின் அளவை லேசாக அதிகரித்து விற்பது, மோசடியானது. எம்.ஆர்.பி., விலை ஜி.எஸ்.டி., குறைப்பின் பலன்கள் நுகர்வோரை சென்றடைய வேண்டும். வரி குறைப்புக்குப் பின் விலையில் மாற்றத்தை கொண்டு வருவதற்கு சில காலம் பிடிக்கும். அதே நேரம் ஜி.எஸ்.டி., கு றைப்புக்கான அர்த்தம் பாழாகி விடக்கூடாது. ஆனால், உற்பத்தியாளர்களும், சில்லரை வர்த்தகர்களும் நுகர்வோருக்கு பலன் சென்றடையாத வகையில், சாமர்த்தியமாக வியா பாரம் செய்கின்றனர். வரி குறைப்பு உடனடியாக அமலுக்கு வரும்போது, எம்.ஆர்.பி., விலை அப்படியே தான் இருக்கும். ஆனால், வரி குறைந்திருக்கும். எ னவே, அந்த பொருளின் எம்.ஆர்.பி., விலை யை குறைத்து விற்பது தான் சரியாக இருக்கும். அதற்கு மாறாக, நுகர்வோருக்கு தெரியாமல் பொருளின் அளவை ரகசியமாக அதிகரித்து, எம்.ஆர்.பி., விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் விற்பது மோசடியான செயல். இது நுகர்வோரின் தேர்வு உரிமையையும் பறிக்கும் செயல். எனவே, ஜி.எஸ்.டி., குறைப்புக்கு ஏற்றபடி எம்.ஆர்.பி., விலையை குறைக்காவிட்டால், அந்நிறுவனத்தின் உரிமத்தை பறிக்கலாம். வரிக்கு ஏற்ப விலையை குறைக்க சொல்லும் அதிகாரம், சம்பந்தப்பட்ட ஆணையத்திற்கு இருக்கிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை