உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டி20 உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் - பிரதமர் மோடி பேசியது என்ன?

டி20 உலக கோப்பை வென்ற இந்திய வீரர்கள் - பிரதமர் மோடி பேசியது என்ன?

புதுடில்லி: வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற 'டி20' உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இந்திய அணி 'சாம்பியன்' ஆனது. 17 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியதற்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய வீரர்கள், பிரதமர் மோடியை நேற்று (ஜூலை 4) சந்தித்தனர். வீரர்கள், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்ளிட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது வீரர்கள் மற்றும் பிரதமர் மோடி என்ன பேசினார்கள் என்பது குறித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி

நீங்கள் அனைவரும் நம் நாட்டை உற்சாகத்தாலும், கொண்டாட்டத்தாலும் நிரப்பி, நாட்டு மக்கள் அனைவரின் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றியுள்ளீர்கள். இது எங்களுக்கு மகிழ்ச்சியான விஷயம். உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ராகுல் டிராவிட், பயிற்சியாளர்

உங்களைச் சந்திக்க எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஆமதாபாத்தில் நடந்த 50 ஓவர் உலக கோப்பை பைனலின்போது, ​​நீங்களும் அங்கு வந்திருந்தீர்கள். அன்றைய தினம் நல்லபடியாக அமையவில்லை. ஆனால் தற்போது உலக கோப்பையை வென்ற இந்த மகிழ்ச்சியான தருணத்தில் உங்களைச் சந்திப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். கேப்டன் ரோகித் உள்ளிட்ட அணியினர் காட்டிய போராட்ட மனப்பான்மையால் இது சாத்தியமானது. நமது அணியினர் இளைய தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

ரோகித் சர்மா, கேப்டன்

நாங்கள் அனைவரும் இந்த தருணத்திற்காக நீண்ட நாட்கள் காத்திருந்தோம்; இதற்காக கடினமாக உழைத்தோம். பலமுறை உலகக் கோப்பையை வெல்வதற்கு மிக அருகில் வந்தோம், ஆனால் எங்களால் முன்னேற முடியவில்லை, ஆனால் இந்த முறை அனைவராலும் இதை அடைய முடிந்தது.

ரிஷப் பன்ட், விக்கெட் கீப்பர்

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. அது கடினமாக இருந்தது. அந்த சமயத்தில் நீங்கள் என் அம்மாவிற்கு கால் செய்து நலம் விசாரித்துள்ளீர்கள். இதனை என் அம்மா சொன்னபோது மன அமைதி கிடைத்தது. அதன்பிறகு, குணமடையும் போது, என்னால் விளையாட முடியுமா எனத் தெரியவில்லை. மீண்டும் கிரிக்கெட் விளையாடும் போது முன்பு விளையாடியதை விட இன்னும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்து ஒன்றரை ஆண்டுகளாக கடுமையாக உழைத்தேன்.

விராட் கோஹ்லி, துவக்க வீரர்

எங்கள் அனைவரையும் இங்கு அழைத்ததற்கு பிரதமருக்கு நன்றி. இந்த நாள் எப்போதும் என் மனதில் நிலைத்திருக்கும். இந்த உலக கோப்பை தொடர் முழுவதும் நான் விரும்பிய பங்களிப்பை என்னால் செய்ய முடியவில்லை. இதனை பயிற்சியாளர் ராகுலிடமும் கூறினேன். மீண்டும் உன்னுடைய ஆட்டத்தை வெளிப்படுத்தும் சூழல் அமையும் என்றார். ரோகித் சர்மாவிடமும் நான் விரும்பியபடி பேட்டிங் செய்ய முடியும் என நம்பிக்கையில்லை எனக் கூறினேன். பின்னர் அவர்கள் அளித்த நம்பிக்கையில் பைனலில் முதல் 4 பந்தில் 3 பவுண்டரி அடித்தேன்.

பும்ரா, வேகப்பந்துவீச்சாளர்

இந்தியாவுக்காக எப்போதெல்லாம் சூழ்நிலை கடினமாக இருக்கிறதோ, அந்த சூழ்நிலையில் நான் பந்து வீச வேண்டும். ஒரு வகையில் அணிக்கு என்னால் உதவ முடிகிறது என்றாலோ, என்னால் போட்டியை வெல்ல முடிந்தாலோ, எனக்கு அதிக நம்பிக்கை வருகிறது. அந்த நம்பிக்கையை முன்னெடுத்துச் செல்கிறேன். குறிப்பாக பைனலில் நான் கடினமான சூழல்களில் பந்துவீச வேண்டிய நிலை இருந்தது. இந்திய அணியின் வெற்றிக்கு உதவியதில் மகிழ்ச்சி.

ஹர்திக் பாண்ட்யா, ஆல்ரவுண்டர்

கடந்த 6 மாதங்கள் எனக்கு பொழுதுபோக்காக இருந்தது. நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தன; பொதுமக்கள் என்னைக் கொச்சைப்படுத்தினர். நிறைய விஷயங்கள் நடந்தன. கடினமாக உழைத்து, வலுவடைவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

சூர்யகுமார், பேட்ஸ்மேன்

பைனலின் இறுதி ஓவரில் கேட்ச் பிடித்தபோது, அந்த நிமிடம் பந்தைப் பிடிக்கலாமா வேண்டாமா என்று யோசிக்காமல், பந்து என் கையில் வந்தவுடன், அதை பிடித்து மறுபக்கம் வீச வேண்டும் என்று நினைத்தேன். அதனை முயற்சி செய்து கேட்ச் பிடித்தேன். இதுபோன்ற பீல்டிங்கில் நிறைய பயிற்சி செய்திருக்கிறோம். இவ்வாறு பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ