உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் சித்தராமையாவால் அவமதிப்பு: போலீஸ் அதிகாரி கடிதத்தால் பரபரப்பு

முதல்வர் சித்தராமையாவால் அவமதிப்பு: போலீஸ் அதிகாரி கடிதத்தால் பரபரப்பு

பெங்களூரு: கர்நாடகாவின் பெலகாவியில் நடந்த நிகழ்ச்சியில், தன்னை அடிக்க முதல்வர் கை ஓங்கியதால், விரக்தியடைந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி, முதல்வருக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதம் வெளியாகி உள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 28ம் தேதி, காங்கிரஸ் சார்பில் பெலகாவியில் போராட்டம் நடந்தது.

மன உளைச்சல்

இதில், முதல்வர் சித்தராமையா உரையாற்றும்போது, கூட்டத்தில் புகுந்த பா.ஜ.,வினர், அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் முதல்வர் எரிச்சல் அடைந்தார். பாதுகாப்பு பொறுப்பை ஏற்றிருந்த தார்வாட் ஏ.எஸ்.பி., நாராயணா பரமனியை, மேடைக்கு அழைத்து வசைபாடினார். ஆத்திரத்தில் அவரை அடிக்க கையை ஓங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது.இந்த சம்பவம், ஏ.எஸ்.ஐ., நாராயணா பரமனியை அதிகம் பாதித்தது. விருப்ப ஓய்வு பெற முடிவு செய்து, அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இந்நிலையில், முதல்வருக்கு ஏ.எஸ்.பி., நாராயணா பரமனி எழுதியுள்ள கடிதம்:முதல்வரான நீங்கள் என்னை அவமதித்ததால், மனம் நொந்து விருப்ப ஓய்வு பெற, முடிவு செய்துள்ளேன். 1994ல் எஸ்.ஐ.,யாக நியமிக்கப்பட்ட நான், 31 ஆண்டுகளாக பல்வேறு இடங்களில், பல பதவிகளை வகித்தேன்.காங்கிரஸ் தொண்டர்கள், பொது மக்கள் அமர்ந்திருந்த இடத்தின் பாதுகாப்பு பொறுப்பு, வேறொரு எஸ்.பி., அளவிலான அதிகாரியிடம் இருந்தது. அங்கு யாரோ நான்கைந்து பேர், கருப்புக் கொடியை ஏந்தி கோஷம் போட்டனர். அப்போது நீங்கள் உரையாற்றுவதை நிறுத்தி, என்னை நோக்கி கையை நீட்டி, 'யாருய்யா இங்கே எஸ்.பி., இங்கே வா' என, அழைத்தீர்கள்.அந்த இடத்தில் வேறு போலீஸ் அதிகாரி யாரும் இல்லாததால், உங்களின் அழைப்புக்கு மதிப்பளித்து, மேடைக்கு வந்து மரியாதையுடன் நின்றேன். நீங்கள் எந்த விளக்கமும் கேட்காமல், திடீரென என் கன்னத்தில் அறைய கையை ஓங்கினீர்கள். அப்போது நான் சில அடிகள் பின்னோக்கி சென்றதால், கன்னத்தில் அடி விழாமல் தப்பினேன்.நான் செய்யாத தவறுக்கு, அவமானத்துக்கு ஆளானேன். உங்கள் அடியில் இருந்து தப்பினேனே தவிர, பொது இடத்தில் நடந்த அவமானத்தில் இருந்து தப்ப முடியவில்லை. உங்கள் பதவிக்கு கரும்புள்ளி ஏற்பட கூடாது என்பதால், மறு பேச்சு பேசாமல் மேடையில் இருந்து, கீழே இறங்கி சென்றேன்.போலீஸ் சீருடையில் இருந்த என்னை பொது இடத்தில் அவமதித்ததால், துறை அதிகாரிகளின் மனோ திடம் குறைந்துள்ளது. அவமதிப்புடன் நான் வீட்டுக்கு சென்றபோது, மனைவியும், பிள்ளைகளும் துயரம் தாங்காமல் கண்ணீர் சிந்தினர். இதுகுறித்து, விசாரித்து எனக்கும், என் மனைவிக்கும் வந்த தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் அளிக்க முடியாமல், மன அழுத்தத்துக்கு ஆளானோம்.இவ்வளவு நடந்தும் முதல்வரோ அல்லது அவரது சார்பில் அரசு அதிகாரிகளோ, எனக்கு ஆறுதல் கூற முன் வரவில்லை.தனிப்பட்ட பிரச்னைகளை ஒதுக்கி, அரசின் நலனுக்காக பணியாற்றும் எங்களை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு நடந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் உங்களின் செயல், என்னையும், மற்ற அரசு ஊழியர்களின் மனோ திடத்தையும் குலைத்துள்ளது.இவ்வாறு அதில்கூறியுள்ளார்.

முதல்வர் சமாதானம்

அதிகாரியின் விருப்ப ஓய்வு முடிவால், முதல்வர் சித்தராமையா தர்ம சங்கடத்துக்கு ஆளானர். முதல்வரும், உள்துறை அமைச்சர் பரமேஸ்வரும், நேற்று மதியம் ஏ.எஸ்.பி., நாராயண பரமனியை போனில் தொடர்பு கொண்டு பேசி சமாதானம் செய்து, 'விருப்ப ஓய்வு பெற வேண்டாம்' என, கேட்டுக் கொண்டனர். இதனால், அவர் பணிக்கு வர ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

rama adhavan
ஜூலை 04, 2025 22:42

பொது இடத்தில் இப்படி அரசு அலுவலரை அடிக்க கை ஓங்கியதற்கு வழக்கு போடலாமே?


Sudha
ஜூலை 04, 2025 22:05

நாட்டை காக்கும் கை


Ramesh Sargam
ஜூலை 04, 2025 12:49

என்னதான் முதல்வர் சித்தராமையா மன்னிப்பு கேட்டாலும் அவர் செய்த செயல் முதல்வர் பதவிக்கு அழகல்ல. இதுபோன்று இதற்கு முன்னரும் போலீஸ் அதிகாரிகளை, அரசு அதிகாரிகளை, கட்சியினரை கையோங்கி அடிக்கும் சம்பவங்கள் நாடு முழுவதும் நடந்திருக்கிறது. முதல்வர் என்றால், அமைச்சர்கள் என்றால் என்ன பெரிய கொக்கா. பொது இடத்தில் மற்ற அரசு அதிகாரிகள் மீது எப்படி கை ஓங்கலாம்? பதவியில் இருக்கும்வரைதான் அதிகாரிகள் உங்களுக்கு மதிப்பு தருவார்கள். பதவி பறிபோனபின் உங்கள் மீது அவர்கள் கை ஓங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. அதை அமைச்சர்கள் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.


கண்ணன்
ஜூலை 04, 2025 11:56

முறையற்ற படிப்பறிவற்றோர் பதவிக்கு வந்தால் அப்படித்தான் நடக்கும்


c.k.sundar rao
ஜூலை 04, 2025 09:51

Arrogant


VENKATASUBRAMANIAN
ஜூலை 04, 2025 08:16

முதல்வர் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா. இவருக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது. இவர்மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.தனிமனித சுதந்திரம் பறிக்கப்பட்டது.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 04, 2025 06:32

கருநாடகத்தில் மிக மோசமான ஆட்சி காலம் என்றால் அது சித்தராமையாவின் காலம் தான்


கல்யாணராமன் சு.
ஜூலை 04, 2025 12:55

நல்ல வேளை கருநாடகம்னு சொல்லிட்டிங்க, இல்லேனா, பயங்கர போட்டி இருந்திருக்கும் .... எப்பவுமே டையிலே முடிஞ்சிருக்கும் ....


Rajan A
ஜூலை 04, 2025 03:45

இந்த சம்பவம், ஏ.எஸ்.ஐ., நாராயணா பரமனியை அதிகம் பாதித்தது. விருப்ப ஓய்வு பெற முடிவு செய்து, அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.- ஏஸ்பியை ஏஸ்ஐ என்று தவறுதலாக டைப் செய்யப்பட்டுள்ளது. தோழமை சுட்டு


சமீபத்திய செய்தி