உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / யூடியூப் பார்த்து பயிற்சி ; பாபா சித்திக் கொலைக்காக போட்ட பிளான்

யூடியூப் பார்த்து பயிற்சி ; பாபா சித்திக் கொலைக்காக போட்ட பிளான்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: மஹா., முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை கொலை செய்வதற்காக, கொலையாளிகள் போட்ட பிளான் போலீசாரை திடுக்கிடச் செய்துள்ளது.மும்பையில் கடந்த 12ம் தேதி இரவு மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். இக்கொலைக்கு சிறையில் இருக்கும் பிரபல 'கேங்ஸ்டார்' லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உ.பி.,யை சேர்ந்த தர்மராஜ் காஷ்யப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த குர்மெல் பல்ஜித் சிங், ஹரிஷ்குமார் பலக்ராம் நிஷாத், பிரவீன் லோங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஷிவ்குமார் கவுதம் என்பவனை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கொலையில் மேலும் தொடர்புடையவர்களை கைது செய்ய, தனிப்படைகள் மும்பை, உ.பி., ஹரியானா மாநிலங்களில் சல்லடை போட்டு தேடி வருகின்றனர். பாபா சித்திக் உடன் சேர்ந்து அவரது மகனும் எம்.எல்.ஏ.,வுமான ஜீஷன் சித்திக்கையும் கொலை செய்ய திட்டமிட்டதாக கொலையாளிகள் அளித்த வாக்குமூலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, பாபா சித்திக்கை கொலை செய்வதற்காக அவர்கள் போட்ட திட்டங்கள் தற்போது வெளியாகியுள்ளது. பாபா சித்திக்கை கொல்வதற்காக கொலையாளிகள் 65 தோட்டாக்களை வாங்கியுள்ளனர். அதில், 6 தோட்டாக்கள் 12ம் தேதி சுடப்பட்டு விட்டது. அவர்களிடம் இருந்து ஆஸ்திரேலியா தயாரிப்பு பிஸ்டலும், நாட்டு துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவர்கள் போட்டிருந்த பேக்கில், துருக்கி நாட்டு தயாரிப்பு பிஸ்டலும், 30 தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டது. அதோடு, ஷிவகுமார் கவுதமின் ஆதார் கார்டும், அவருடைய மற்றொரு போலி ஆதார் கார்டும் கிடைத்துள்ளது.பாபா சித்திக்கை பைக்கில் வந்து சுட்டு விட்டு, எஸ்கேப் ஆகிடலாம் என்று தான் முதலில் திட்டம் தீட்டினர். ஆனால், டிராபிக் விபத்தில் கொலையாளிகள் சிக்கியதால், திட்டத்தை மாற்றிக் கொண்டனர். அதாவது, ஆட்டோவில் ஸ்பாட்டுக்கு சென்று விட்டு, கொலை திட்டத்தை அரங்கேற்றிய பிறகு, ஆடைகளை மாற்றி, மக்களோடு மக்களாக எஸ்கேப் ஆகிவிடலாம் என்றும் முடிவு செய்திருந்தனர். அதுமட்டுமில்லாமல், யூடியூப்பை பார்த்து துப்பாக்கியை எப்படி கையாளுவது, சுடுவது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர். அதுமட்டுமில்லாமல், தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கியை வைத்தும் ஒத்திகை பார்த்துள்ளனர். அதில், பிரபலங்களின் வீட்டு திருமண விழாக்களில் பொழுதுபோக்கு வகை துப்பாக்கிகளை கையாண்ட அனுபவம் கொண்ட ஷிவ்குமார் கவுதம் தான் இந்தக் கொலையின் மூளையாக செயல்பட்டுள்ளார். அவர் தான் காஷ்யாப்பிற்கும், குர்மெல் பல்ஜித்திற்கும் பயிற்சி கொடுத்து, இந்தக் கொலை குற்றத்தை அரங்கேறியுள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி