எஸ்.சி., பிரிவில் உள் இடஒதுக்கீடு; ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை
பெங்களூரு: 'உள் இடஒதுக்கீடு தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மோகன் தாஸ் தலைமையிலான குழு, ஒரு வாரத்தில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கும். இது தொடர்பாக முதல்வருடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்' என, அமைச்சர்கள் பரமேஸ்வர், மஹாதேவப்பா தெரிவித்தனர்.ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மோகன் தாஸ் மற்றும் மூத்த அதிகாரிகளுடன், எஸ்.சி., பிரிவில் உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து, முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார்.கூட்டத்துக்கு பின், அமைச்சர்கள் பரமேஸ்வர், மஹாதேவப்பா கூட்டாக அளித்த பேட்டி:உள் இடஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர்கள் முனியப்பா, திம்மாபுரா, சிவராஜ் தங்கடகி, ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மேகன் தாஸ் ஆகியோர், தங்கள் கருத்துகளை தெரிவித்தனர்.விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கும்படி ஆணையத்துக்கு முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் எங்கள் அரசு உறுதியாக உள்ளது.தரவுகளின் அடிப்படையில், இடஒதுக்கீடு அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பரிந்துரைத்துள்ளோம். ஒரு வாரத்திற்குள் இடைக்கால அறிக்கையை, ஓய்வு பெற்ற நீதிபதி நாக்மோகன் தாஸ் சமர்ப்பிப்பார். செயல்படுத்துவது குறித்து முதல்வருடன் ஆலோசித்து, முடிவெடுக்கப்படும்.இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின், உச்சநீதிமன்ற தீர்ப்பின் விதிகளின் அடிப்படையில், உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.உள் இடஒதுக்கீடு தொடர்பாக, அனைத்து துறைகளும் அரசு ஊழியர்களின் ஜாதி தொடர்பான தகவல்கள் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளன. உள் இடஒதுக்கீடு குறித்து முடிவு எடுக்கும் வரை, பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு செயல்முறைகள் நிறுத்தி வைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.