பெங்களூரில் ஜன., 23 - 25 வரை சர்வதேச இயற்கை சிறுதானிய மேளா
பெங்களூரு: ''பெங்களூரு அரண்மனை மைதானத்தில் வரும் 23 முதல் 25 வரை, 'சர்வதேச இயற்கை சிறுதானிய மேளா' நடக்கிறது,'' என வேளாண் துறை அமைச்சர் செலுவராயசாமி தெரிவித்தார்.இது தொடர்பாக, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:பெங்களூரு அரண்மனை மைதானத்தில் உள்ள திரிபுரவாசினி அரங்கில், வரும் 23 முதல் 25 வரை 'சர்வதேச இயற்கை சிறுதானிய மேளா'வை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார்.கடந்த 20 ஆண்டுகளாக, இயற்கை விவசாயத்தை மாநில அரசு ஊக்குவித்து வருகிறது.2017 முதல் இயற்கை மற்றும் தானியங்கள் வர்த்தக கண்காட்சியின் முதல் பதிப்பு நடத்தியது. இதன் மூலம், நாட்டில் இயற்கை மற்றும் தானியங்களை ஊக்குவிப்பதில் கர்நாடக மாநிலம் முன்னணியில் உள்ளது.இந்தாண்டு நடக்கும் கண்காட்சி, விவசாயிகள், விவசாயிகள் குழுக்கள், உள்நாடு, வெளிநாட்டு நிறுவனங்கள், மத்திய, மாநில அமைப்புகளை ஒருங்கிணைத்து, புதிய வாய்ப்புகளை ஆராய்ந்து, பயனுள்ள சந்தையை உருவாக்கும்.வருங்கால சந்ததியினருக்கு உணவளிக்கவும், எதிர்காலத்தில் பாரம்பரிய தேசிய இனங்களை வளர்க்கவும், பாதுகாக்கவும் கரிம மற்றும் முழு தானியங்களை பாரம்பரிய உணவாக மேம்படுத்துவதே அரசின் நோக்கம்.இயற்கை மற்றும் தானியங்களை ஊக்குவிப்பதற்காக, பெங்களூரு ஹெப்பாலில், 20 கோடி ரூபாய் செலவில், 'செடிகள் மற்றும் தானியங்கள் மையம்' கட்டுவதற்கான பணியை முதல்வர் துவக்கி வைப்பார். மூன்று நாள் நடக்கும் கண்காட்சியில், 300 ஸ்டால்கள் அமைக்கப்படுகிறது. உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட முக்கிய பேச்சாளர்கள், விவசாயம் தொடர்பாக தகவல்களை அளிப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.