உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பல்லாரியில் கர்ப்பிணியர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை குழு!: 5 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவு

பல்லாரியில் கர்ப்பிணியர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை குழு!: 5 நாளில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவு

பெங்களூரு, டிச. 10- பல்லாரி அரசு மருத்துவமனையில், குழந்தை பிரசவித்த பெண்கள் அடுத்தடுத்த இறந்தது தொடர்பாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு, ஐந்து நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.பல்லாரி மாவட்ட அரசு மருத்துவமனையில், நவ., 9 முதல் 11ம் தேதிக்குள் ரோஜம்மா, நந்தினி, முஸ்கான், மஹாலட்சுமி, லலிதம்மா ஆகியோர் அறுவை சிகிச்சை மூலம், அடுத்தடுத்து குழந்தை பெற்றனர். இவர்கள் பிரசவித்த மறுநாளே, உயிரிழந்தனர்.

தொடர் மரணம்

இந்த சம்பவம், மாநிலம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், 'விம்ஸ்' எனப்படும் விஜயநகரா மருத்துவ அறிவியல் மையத்தில் கடந்த நவ., 11ல் கூட்லிகியை சேர்ந்த சுமயா என்பவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். மறுநாள் குழந்தை பிரசவித்த அவர், 24 மணி நேரம் ஐ.சி.யு.,வில் வைக்கப்பட்டிருந்தார்.அன்று முதல் அவரின் உடல் நிலை மோசமானது. உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க துவங்கியது. டிச., 5ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.பிரசவித்த பெண்களின் தொடர் மரணம், பொது மக்கள் இடையே பீதியை ஏற்படுத்தியது. டாக்டர்களின் அலட்சியத்தால் தான், பெண்கள் உயிரிழந்ததாக பல்வேறு அமைப்பினர் மற்றும் எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தின.

தரமற்ற குளுகோஸ்

விசாரணை நடத்தியதில், இறந்த பெண்களுக்கு அளிக்கப்பட்ட ஐ.வி., குளுகோஸ், தரமற்றது என்பதை உறுதி செய்தனர். இதையடுத்து, மருத்துவமனையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் குளுகோஸ்கள், நோயாளிகளுக்கு வழங்குவது நிறுத்தப்பட்டது.அத்துடன், குளுகோஸ் வினியோகித்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மருந்து நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும்; மருந்து கட்டுப்பாட்டாளர் டாக்டர் உமேஷை, 'சஸ்பெண்ட்' செய்யவும் முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார்.தேசிய அளவில் பெரும் விவாதமாக மாறிய இந்த சம்பவத்தில், பல்லாரி மாவட்ட மருத்துவமனை மற்றும் விம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் மீது வழக்கு பதிவு செய்யும்படி, கர்நாடக உப லோக் ஆயுக்தா நீதிபதி வீரப்பா உத்தரவிட்டார்.

லோக் ஆயுக்தா

அத்துடன், இரு மருத்துவமனைகளிலும், 25க்கும் மேற்பட்ட லோக் ஆயுக்தா அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். நோயாளிகள், அவர்களின் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.தற்போது இவ்விஷயத்தை, நடந்து வரும் குளிர்கால சட்டசபை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் எழுப்புவர் என்பதை முதல்வர் சித்தராமையா உணர்ந்தார்.

விதிமீறல்கள்

இதையடுத்து, இது குறித்து விசாரிக்க, திறன் மேம்பாட்டு ஆணைய நிர்வாக இயக்குனர் கனகவள்ளி தலைமையில், உதவி மருந்து கட்டுப்பாட்டாளர் வெங்கடேஷ், பெங்களூரு மருத்துவ கல்லுாரியின் மைக்ரோ பயாலஜிஸ்ட் டாக்டர் ஆசிமா பானு மற்றும் ராஜிவ் காந்தி சுகாதார அறிவியல் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமித்த பேராசிரியர் என நான்கு பேர் அடங்கிய குழுவை அரசு நியமித்து உள்ளது.கே.எஸ்.எம்.எஸ்.சி.எல்., எனும் கர்நாடகா மாநில மருந்து வினியோக கார்ப்பரேஷன் நிறுவன அதிகாரிகளின் பணி, குறைகளை இக்குழு மதிப்பாய்வு செய்ய வேண்டும்.மருந்துகள் கொள்முதலில் விதிமீறல்கள் மற்றும் மருந்து மாதிரிகளை ஆய்வகங்களில் சமர்ப்பித்து, அறிக்கை பெற வேண்டும். இவை அனைத்தும் ஐந்து நாட்களில், அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்' என்று அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ