உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கருணை அடிப்படையிலான பணி மனைவிக்கா; மாமியாருக்கா? குழப்பத்தை தீர்த்த ஐகோர்ட்

கருணை அடிப்படையிலான பணி மனைவிக்கா; மாமியாருக்கா? குழப்பத்தை தீர்த்த ஐகோர்ட்

நைனிடால்: இறப்பிற்கு பின் கருணை அடிப்படையிலான பணி நியமனத்துக்கு, மாமியாரின் பெயரை கணவர் பதிவு செய்த நிலையில், மனைவிக்கு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரகண்டின் நைனிடால் வனத்துறையில் காவலாளியாக கிஷண் சிங் தபோலா என்பவர் பணியாற்றினார். இவர், கடந்த 2020ல் உயிரிழந்தார். முன்னதாக, இறப்பிற்கு பின் கருணை அடிப்படையில் தன் பணியை, மாமியாருக்கு வழங்க அவர் முன்மொழிந்திருந்தார். இதைத் தொடர்ந்து மாமியாருக்கு பணி வழங்க வனத்துறை முடிவு செய்தது. இதை எதிர்த்து, தபோலாவின் மனைவி உத்தரகண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தபோலா இறந்த பின், அவரின் மாமியாருக்கு பணி வழங்க முடிவு செய்தது ஏன்' என, நீதிபதி கேள்வி எழுப்பினார். அப்போது, வனத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'தபோலாவுக்கும், அவர் மனைவிக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால், தன் மாமியாரின் பெயரை கருணை அடிப்படையிலான பணிக்கு அவர் முன்மொழிந்து இருந்தார். ஆகையால், அவருக்கு பணி வழங்க முடிவு செய்யப்பட்டது' என, தெரிவித்தார். 'வாரிசு அடிப்படையில், தபோலா இறந்த பின் அவரது பணப்பலன் முழுதும், மனைவிக்கு தரப்பட்டு இருப்பது அரசு தரப்பிலான ஆவணங்கள் வாயிலாக நிரூபணமாகிஉள்ளது. 'எனவே, தபோலாவின் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்குவது குறித்து பரிசீலித்து மூன்று மாதங்களுக்குள் ஆணை பிறப்பிக்க வேண்டும்' என நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
நவ 02, 2025 09:43

பணி கிடைத்தபின், ஒருவேளை அந்த மனைவி, தன்னுடைய அம்மாவை, அதான் இறந்துபோனவரின் மாமியாரை சரியாக கவனிக்காவிட்டால், அப்பொழுது அந்தப் பணியை மாமியாருக்கே கொடுக்கவேண்டும். பிற்காலத்தில் இப்படி ஆக வாய்ப்பிருக்கிறது என்று அறிந்து நீதிபதிகள் தீர்ப்பை யோசித்து வழங்கவேண்டும்.


புதிய வீடியோ