மேலும் செய்திகள்
'தி.மு.க.,வுடன் இணைவதை பினராயி தடுத்தார்'
09-Dec-2024
திருவனந்தபுரம், 'கேரளா மினி பாகிஸ்தான் போன்றது' என, கருத்து தெரிவித்த பா.ஜ.,வைச் சேர்ந்த மஹாராஷ்டிரா அமைச்சர் நித்தேஷ் ரானேவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார்.மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா - தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடும் எதிர்ப்பு
இந்த அரசில், பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான நாராயண் ரானேவின் மகன் நித்தேஷ் ரானே, 42, மீன்வளத் துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய இவர், 'கேரளா மினி பாகிஸ்தான் போன்றது. அதனால் தான், ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் அங்கு போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 'அவர்களுக்கு பயங்கரவாதிகள் ஓட்டளிக்கின்றனர். இது தான் உண்மை' என்றார். அமைச்சர் நித்தேஷ் ரானேவின் இந்த பேச்சுக்கு, காங்., - உத்தவ் சிவசேனா - தேசியவாத காங்., சரத் பவார் பிரிவு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. காங்., செய்தி தொடர்பாளர் அதுல் லோந்தே கூறுகையில், ''நித்தேஷ் ரானேவிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்? கேரளா மீது பாக்., முத்திரை குத்துகிறார். ''அங்குள்ள வாக்காளர்களை பயங்கர வாதிகள் என, அழைக்கிறார். அமைச்சர் பதவியில் நீடிக்க அவருக்கு உரிமை இல்லை,'' என்றார்.இந்த விவகாரத்தில், மஹாராஷ்டிரா அமைச்சர் நித்தேஷ் ரானேவுக்கு கேரள முதல்வரும், மார்க்.கம்யூ., மூத்த தலைவருமான பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்தார். மதச்சார்பற்ற சக்தி
இது குறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:மஹாராஷ்டிரா அமைச்சர் நித்தேஷ் ரானேவின் கருத்து முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற பேச்சுக்கள், மதச்சார்பின்மை மற்றும் மத நல்லிணக்கத்தின் கோட்டையான கேரளாவுக்கு எதிராக, ஒரு கும்பல் நடத்தும் வெறுப்பு பிரசாரங்களை பிரதிபலிக்கிறது. கேரளா மீதான இந்த மோசமான தாக்குதலை கண்டிக்கிறோம். இதுபோன்ற வெறுப்பு பிரசாரத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக மற்றும் மதச்சார்பற்ற சக்திகளும் ஒன்றிணைய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
09-Dec-2024