UPDATED : ஜன 04, 2024 02:19 AM | ADDED : ஜன 04, 2024 02:15 AM
புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் மூன்று சம்மன் அனுப்பியும் ஆஜராகாத டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என ஆம் ஆத்மி கட்சி மூத்த நிர்வாகி அதிஷி தனது ‛‛எக்ஸ்' வளைத்தில் பதிவேற்றியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2021 - 2022 நிதியாண்டில், மதுபான விற்பனை தொடர்பான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டது. இதன் வாயிலாக பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு, துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறையும் வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில், கலால் துறையை கவனித்து வந்த, துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டார்.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி , புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, அமலாக்கத் துறை கடந்த 2023 நவ.2-ம் தேதியும் தொடர்ந்து டிச.21-ம் தேதியும் சம்மன் அனுப்பியது. பல்வேறு காரணங்களை கூறி ஆஜராவதை தவிர்த்து வந்தார். இதையடுத்து மீண்டும் ஜன. 3-ம் தேதி (நேற்று) ஆஜராக வேண்டும் எனவும் இல்லையெனில் ஜாமினில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்தது. நேற்றும் ஆஜராகவில்லை.இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி கல்வி அமைச்சர் அதிஷி தனது 'எக்ஸ்' வளைத்தில் பதிவேற்றியுள்ளதாவது, முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை விசாரணைக்கு அழைப்பது, மத்திய அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. கெஜ்ரிவாலை கைது செய்து, வர இருக்கும் லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்யவிடாமல் தடுப்பதே நோக்கம்.மூன்று சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாததால், இன்று காலை அவரது வீடு புகுந்து அமலாக்கத்துறையினர் வலுக்கட்டாயமாக அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடலாம். இவ்வாறு எக்ஸ் வளைத்தில் பதிவேற்றியுள்ளார்.பயந்தாங் கொள்ளி கெஜ்ரிவால்
மதுபான கொள்கை ஊழலில் புதுடில்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் சம்பந்தம் உள்ளது. தான் கைது செய்யப்படுவோம் என பயந்து நடுங்கும் அவர், அமலாக்கத்துறை விசாரணையை தவிர்க்க தொடர்ந்து நொண்டி சாக்கு கூறி வருகிறார். கவுரவ் பாட்டியாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,