| ADDED : மே 02, 2025 12:40 AM
புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த அமைப்பு மற்றும் இரு வழக்கறிஞர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன அதில், 'பயங்கரவாத தாக்குதலை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு நீதித்துறை கமிஷனை அமைக்க வேண்டும்' என, கோரிக்கை வைத்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கோடீஸ்வர் சிங் கூறியதாவது: பஹல்காம் தாக்குதல் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியை விசாரிக்கச் சொல்கிறீர்கள். இதுபோன்ற பொதுநல வழக்குகளை தாக்கல் செய்யும் முன், பொறுப்புடன் இருங்கள். உங்களுக்கும், சில கடமைகள் உள்ளன. ராணுவத்தின் மன உறுதியை நீங்கள் குலைக்க விரும்புகிறீர்களா? நீதிபதிகள் புலன் விசாரணையில் நிபுணத்துவம் பெற்றுள்ளவர்களா என்ன?பயங்கரவாதத்திற்கு எதிராக ஒவ்வொரு குடிமகனும் கைகோர்த்திருக்கும் முக்கியமான நேரம் இது. ராணுவத்தின் மன உறுதியை சீர்குலைக்கும் இதுபோன்ற மனுவை தாக்கல் செய்யாதீர்கள். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.இதையடுத்து, பஹல்காம் தாக்குதல் தொடர்பான பொதுநல மனுக்களை அனைவரும் வாபஸ் பெற்றனர்.