முதல்வர் நிதிஷ் குமாரின் புதிய அமைச்சரவையில் ஜீன்ஸ், ஷர்ட் அணிந்து பதவி ஏற்ற ஐ.டி., இன்ஜினியர்!
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
பாட்னா: பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான புதிய அமைச்சரவையில் மூத்த தலைவர்கள் பலர் பதவியேற்ற நிலையில், ஜீன்ஸ், ஷர்ட் அணிந்து பதவி ஏற்ற இளைஞர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த இளைஞர் வேறு யாருமில்லை; ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வஹா மகன் தீபக் பிரகாஷ். பீஹாரில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 202ஐ கைப்பற்றி தே.ஜ., கூட்டணி ஆட்சியை தக்க வைத்துள்ளது. கூட்டணியில் உள்ள, மத்திய அமைச்சர் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி ராம்விலாஸ் 19 தொகுதிகளில் வென்ற நிலையில், ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா, போட்டியிட்ட ஆறு தொகுதிகளில் நான்கை கைப்பற்றியது. 10வது முறை புதிய அமைச்சரவையில், அக்கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி தர முடிவு செய்யப்பட்டது. பாட்னாவில் நேற்று முன்தினம் நடந்த பதவியேற்பு நிகழ்ச்சியில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், 10வது முறையாக முதல்வராக பதவியேற்றார். தொடர்ந்து, புதிய அமைச்சரவையும் பதவியேற்றது. பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தியின் மூத்த நிர்வாகிகள் அமைச்சர்களாக பதவியேற்ற நிலையில், பிரதமர் நரேந்திர மோடியிடம் திடீரென ஆசி வாங்கி விட்டு, ஜீன்ஸ் பேன்ட், முழு கை சட்டை அணிந்த ஒல்லியான இளைஞர் ஒருவர் அமைச்சராக பதவியேற்றது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. அவர் வேறு யாருமில்லை. ராஜ்யசபா எம்.பி., உபேந்திர குஷ்வஹாவின் மகன் தீபக் பிரகாஷ்தான். பு திய அமைச்சரவையில், உபேந்திராவின் மனைவியும், சசாரம் தொகுதியில் வென்ற வருமான சினேலதா இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , கடைசி நேர, 'ட்விஸ்ட்' ஆக அவரது மகன் தீபக் பிரகாஷ் இடம் பெற்றார். செல்வாக்கு இவர், எ ம்.எல்.ஏ., - எம்.எல்.சி., இல்லை. அமைச்சர் பதவியில் தொடர, அடுத்த ஆறு மாதங்களுக்குள் எம்.எல்.ஏ., அல்லது மாநில சட்ட மேல்சபை உறுப்பினராக வேண்டும். அரசியல் செல்வாக்கு உள்ளதால், இது தீபக் பிரகாஷுக்கு எளிது. மகன் தீபக் பிரகாஷை அமைச்சராக்கும் உபேந்திர குஷ்வஹாவின் முடிவுக்கு நிதிஷ் குமார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடன்பாடு தெரிவிக்கவில்லை என்றும், அதற்கு மாறாக, கடைசி நிமிடத்தில் தீபக் பிரகாஷ் பெயர் இறுதி செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தீப க் பிரகாஷ் மட்டுமல்ல, மத்திய அமைச்சரும், ஹிந்துஸ் தானி அவாம் மோர்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மஞ்சியின் மகன் சந்தோஷ் குமார் சுமனுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐ.டி., நிபு ணரான தீபக் பிரகாஷ், 2011-ல், கர்நாடகாவின் மணிப்பாலில் உள்ள எம்.ஐ.டி.,யில் கணினி அறிவியலில் பி.டெக்., முடித்த பின், நான்கு ஆண்டுகள் ஐ.டி., துறையில் பணிபுரிந்தார். தேர்தல் முன் அனுபவம் இல்லாவிட்டாலும், அவரது குடும்பம் அரசியல் செல்வாக்கு மிக்கது.
அரசியலுக்கு புதிதல்ல!
பதவியேற்புக்கு முன்பு தான், அமைச்சர் ஆவது குறித்து எனக்கே தெரிந்தது. நான் அரசியலுக்கு புதிதல்ல. குழந்தை பருவத்திலிருந்தே அரசியலை கவனித்து வருகிறேன். என் தந்தை உபேந்திர குஷ்வஹா பணியாற்றுவதை பார்த்திருக்கிறேன். ஐந்து ஆண்டுகளாக கட்சியில் நான் தீவிரமாக பணியாற்றி வருகிறேன். பதவியேற்பு விழாவில், எனக்கு வசதியாக இருந்த உடைகளை அணிந்தேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் அதையே தொடர்வேன். தீபக் பிரகாஷ், பீஹார் அமைச்சர், ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா
இலாகா ஒதுக்கீடு
புதிய அமைச்சரவையின், இலாகா குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக உள்துறையை கவனித்து வந்த நிதிஷ், இம்முறை பா.ஜ.,வைச் சேர்ந்த துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரிக்கு விட்டுக் கொடுத்துள்ளார். மற்றொரு துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹாவுக்கு, வருவாய் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., அமைச்சர்கள் மங்கள் பாண்டேவுக்கு சுகாதாரம்; திலிப் ஜெய்ஸ்வாலுக்கு தொழில் துறை; ராம் கிருபால் யாதவுக்கு வேளாண் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி அமைச்சர்களான சஞ்சய் குமார், சஞ்சய் சிங் ஆகியோருக்கு முறையே கரும்புத் தொழில், பொது சுகாதார பொறியியல் துறை ஒதுக்கப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா அமைச்சர் சந்தோஷ் குமார் சுமனுக்கு நீர்வளத் துறையும், ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா அமைச்சர் தீபக் பிரகாஷுக்கு பஞ்சாயத்து ராஜ் துறையும் வழங்கப்பட்டுள் ளன.