5 இடங்களில் ஐ.டி., பூங்கா கியோனிக்ஸ் தலைவர் தகவல்
பெங்களூரு: ''மாநிலத்தில் 5 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்,'' என்று, 'கியோனிக்ஸ்' தலைவர் சரத் பச்சேகவுடா தெரிவித்துள்ளார்.பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி: கியோனிக்ஸ் கர்நாடக மின்னணு வளர்ச்சி கழகம் சார்பில், மாநிலத்தில் ஐந்து இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா உருவாக்க திட்டமிட்டு உள்ளோம். தேவனஹள்ளி, மைசூரு, கலபுரகி, ஹூப்பள்ளி, மங்களூரு ஆகிய நகரங்களில் ஐ.டி., நிறுவனங்களுக்கு உலக தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளுடன் கூடிய அலுவலகங்களை கட்டிக் கொடுக்கவும் திட்டமிட்டு உள்ளோம்.அடுத்த சில ஆண்டுகளில், உள்ளூரை சேர்ந்த திறமையான நபர்களுக்கு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அதிக அளவு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும். புதிய தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள், தொழில்நுட்பத் துறையின் உலகளாவிய மையங்களாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.