பொய் கதையிலிருந்து தப்புவது கடினம்: ராஜினாமாவுக்கு பின் தன்கர் பேச்சு
போபால்: துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பின் முதன்முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜக்தீப் தன்கர், “பொய் கதைகள் எனும் சக்கர வியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது,” என, தெரிவித்துள்ளார். நம் நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜக்தீப் தன்கர், 74. இவர், தன் உடல்நிலையை காரணமாக கூறி, ஜூலை 21ல் அப்பதவியை ராஜினாமா செய்தார். பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கிய முதல் நாளில், திடீரென அவர் ராஜினாமா செய்ததற்கு பா.ஜ., தலைமையுடன் ஏற்பட்ட மோதலே காரணம் என எதிர்க்கட்சியினர் விமர்சித்தனர். எனினும் ஜக்தீப் தன்கர், இதைப் பற்றி எந்த கருத்தும் தெரிவிக்காமல், ஊடகங்களை சந்திக்காமல் தவிர்த்து வந்தார். இந்நிலையில் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் மூத்த பிரசாரகர் மோகன் வைத்யா எழுதிய, 'ஹம் ஹவுர் யஹ் விஷ்வா' என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஜக்தீப் தன்கர் பங்கேற்றார். துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகி நான்கு மாதங்களை கடந்தபின் முதன் முறையாக பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன தொழில்நுட்பங்களால் நாகரிக முறையில் மோதல் போக்கு நிலவுகிறது. மன உறுதி, ஆன்மிகம் மற்றும் அறிவு ஆகியவற்றில் இருந்து சிலர் விலகிச் செல்வது வருத்தம் அளிக்கிறது. நம் நாட்டின் ஆழமான கலாசார மற்றும் ஆன்மிக மரபுகளில் இருந்து வலிமையைப் பெற வேண்டியது அவசியம். இதேபோல் ஒருவரின் மனதையும், செயல்பாட்டையும் குழப்பும் வகையில் பொய் கதைகள் என்னும் சக்கரவியூகத்தில் இருந்து தப்புவது கடினமானது. இதுபோன்ற நிலையில், யாரையும் சிக்காமல் கடவுள் காப்பாற்ற வேண்டும். எனினும், எனக்கு நேர்ந்த அனுபவத்தை நான் குறிப்பிடவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.