திராவிட கட்டட கலையில் ஜெயின் கோவில்
ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணாவில் ஸ்ரவணபெளகோலா உள்ளது. இங்கு கோமதீஸ்வரா பாகுபலி சிலை அமைந்துள்ள மலையின் அருகில் சந்திரிகிரி, விந்தியகிரி என இரு புனித மலைகள் உள்ளன.சந்தகிரி மலையில் 'சாமுண்டராயா பசதி கோவில்' உள்ளது. இங்கு மூலஸ்தானத்தில் கருப்பு நிறத்தில் நிமிநாதன் விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், கோவில் திராவிட கட்டட கலையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இக்கோவிலை, கங்கா மன்னர் இரண்டாவது மரசிம்ஹாவின் அமைச்சரவையில் இடம் பெற்ற சாமுண்டாராவா கட்டினார். 982ல் பணிகள் துவங்கி 995ல் நிறைவு பெற்றது. மூலஸ்தானம், நவக்கிரஹம், முக மண்டபம் ஆகியவை உள்ளன.விமான கோபுரத்துடன் மூலஸ்தானம் அமைந்துள்ளது. 12ம் நுாற்றாண்டில் சோழ பேரரசின் ஆட்சியின் கீழ், இக்கோவில் மேம்படுத்தப்பட்டது.கோவிலில் ஜெயின் துறவிகளின் சிலைகள், பத்மாசனம் வடிவில் உள்ளன. ஸ்ரவணபெளகோலாவில், மிகப்பெரிய கோவிலாக கருதப்படுகிறது. இக்கோவிலை பார்க்கும்போது, சாளுக்கிய பாணியின் ஐஹோலே மற்றும் பாதாமி கோவில் வளாகத்தின் தாக்கம் தெரிகிறது.மாமரத்தின் கீழ் அமர்ந்து அருள்பாலிக்கும் அம்பிகை விக்ரஹத்தின் வலது கையில் மா இலை, இடது கையில் புளிய மர இலை உள்ளது.
எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து ஹாசன் விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து டாக்சியில் செல்லலாம்.
ரயிலில் செல்வோர், ஸ்ரவணபெளகோலா ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து அரை கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள சந்திரிகிரி மலைக்குச் செல்லலாம். பஸ்சில் செல்வோர், ஸ்ரவணபெளகோலா பஸ் நிலையத்தில் இறங்கி, டாக்சி, ஆட்டோவில் செல்லலாம்.- நமது நிருபர் -