பயங்கரவாதிகளின் போட்டோக்களை வெளியிட்டது ஜம்மு காஷ்மீர் போலீஸ்; துப்பு கொடுத்தால் சன்மானம்
கிஷ்த்வார்: ஜம்மு காஷ்மீரில் தேடப்பட்டு வரும் 4 பயங்கரவாதிகளின் போட்டோக்களை வெளியிட்டு, அவர்களைப் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளை வேட்டையாடும் ஆபரேஷனில் இந்திய ராணுவம் மற்றும் அம்மாநில போலீசார் கூட்டாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கிஷ்த்வார் மாவட்டத்தில் இருக்கும் 4 பயங்கரவாதிகள் குறித்து துப்பு கொடுத்தால், சன்மானம் வழங்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீசார் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உருது மற்றும் இங்கிலீஷில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் ஷயிப்புல்லா, பார்மேன், அடில் மற்றும் பாஷா ஆகியோரின் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த பயங்கரவாதிகளை பொதுமக்கள் யாரேனும் அடையாளம் கண்டால், அந்த தகவலை எங்களிடம் பகிருங்கள். சரியான தகவலை கொடுப்பவர்களுக்கு ஒரு தீவிரவாதிக்கு ரூ.5 லட்சம் வீதம் சன்மானம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.