UPDATED : செப் 25, 2024 07:45 PM | ADDED : செப் 25, 2024 08:54 AM
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று(செப்.,25) 2ம் கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இரவு 7 மணி நிலவரப்படி 56.79% ஓட்டுப்பதிவாகி உள்ளது என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக தேர்தல் நடந்து வருகிறது. செப்., 18ம் தேதி முதல் கட்டமாக, 24 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக, 26 தொகுதிகளுக்கு இன்று (செப்., 25ம் தேதி) தேர்தல் ஓட்டுப்பதிவு காலை 7 மணிக்கு துவங்கி நடந்து வருகிறது. இரவு 7 மணி நிலவரப்படி 56.79% ஓட்டுப்பதிவாகி உள்ளது.ஓட்டுப் போடுங்க
நமது ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் ஓட்டளிக்குமாறு பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவர், சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'ஜம்மு காஷ்மீரில் இன்று இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து வாக்காளர்களும் ஓட்டளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இத்தருணத்தில், முதன்முறையாக ஓட்டளிக்க போகும் அனைத்து இளம் நண்பர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார். மூன்றாம் கட்டமாக, 40 தொகுதிகளுக்கு அக்., 1ல் தேர்தல் நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அக்.,4ல் நடக்கும். எனக்கூறியுள்ளார்.