இன்ஜின் கட்டுப்பாட்டு அமைப்பை தயாரிக்கிறது ஜப்பான் நிறுவனம்
புதுடில்லி, வாகன உதிரிபாகங்களை தயாரிக்கும், ஜப்பானை சேர்ந்த மரிலி நிறுவனம், பெட்ரோல், சி.என்.ஜி., எத்தனாலில் இயங்கக்கூடிய கலப்பு வாகனங்களுக்கு, அடுத்த தலைமுறை இன்ஜின் கட்டுப்பாட்டு அமைப்புகளை இந்தியாவில் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியா, பிரேசில், மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க சந்தைகளுக்காக இங்கு தயாரிக்கப்படுகிறது. இதன் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் தயாரிப்பு, உலக தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் தயாரிக்கப்படும் என, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு, வேகமாக செயல்பட்டு, இன்ஜினுக்குள் ஒரே நேரத்தில் பல்வேறு பணிகளை மேற்கொள்ள முடியும். இது, காற்று, எரிபொருள் கலப்பை வேகமாக இன்ஜினுக்குள் தெளிக்க உதவும், எட்டு பெட்ரோல் இன்ஜின் இன்ஜெக்டர்களையும், நான்கு சி.என்.ஜி., இன்ஜின் இன்ஜெக்டர்களையும் கட்டுப்படுத்தும் திறன் உடையது. மென்பொருளில் இயங்கும் வாகனங்களை, செல்போனை போல அப்டேட் செய்து மேம்படுத்துவது, வாகன பராமரிப்பு மற்றும் சரிபார்ப்பை எளிதாக்குவது, நச்சு உமிழ்வை கட்டுப்படுத்தி, எரிவாயு திறன் மற்றும் செயல்திறனை அதிகரிப்பது என பல்வேறு பணிகளை மேற்கொள்ள, இந்த அமைப்பு உதவுகிறது.