உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலபுரகியில் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை

கலபுரகியில் ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை

கலபுரகி: பெங்களூரில் இருப்பது போன்றே, கலபுரகியின், அன்னபூர்ணா கிராஸ் அருகில் புதிதாக அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்ட ஜெயதேவா இதய நோய் மருத்துவமனையை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பலரின் முன்னிலையில் முதல்வர் சித்தராமையா, நேற்று திறந்துவைத்தார்.விழாவில் முதல்வர் பேசியதாவது:கலபுரகியில் 377 கோடி ரூபாய் செலவில், புதிதாக ஜெயதேவா இதய நோய் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. பெங்களூரு, மைசூருக்கு பின், கல்யாண கர்நாடகாவில் கட்டப்பட்ட முதல் மருத்துவமனை இதுவாகும். இம்மருத்துவமனை, 371 படுக்கைகள் திறன்கொண்டது.இதில் மூன்று அறுவை சிகிச்சை அறைகள், ஒரு ஹைப்ரீட் வெளி நோயாளிகள் பிரிவு, 120 படுக்கைகள் திறன் கொண்ட பொது வார்டு, மூன்று ஆய்வகங்கள், 105 படுக்கை வசதி கொண்ட ஐ.சி.யு., சிறப்பு வார்டுகள், கார்டியாலஜி, சர்ஜரி, பீடியாட்ரிக், ரேடியாலஜி, சிடி ஸ்கேன், எம்.ஆர்.ஐ., அல்ட்ரா சோனோகிராபி, ரத்த வங்கி வசதிகள் உள்ளன.

இலவச சிகிச்சை

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பி.பி.எல்., கார்டுதாரர்களுக்கு, முற்றிலும் இலவசமாக சிகிச்சை கிடைக்கும். வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ள ஏ.பி.எல்., கார்டுதாரர்களுக்கு, சலுகை கட்டணத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.கல்யாண கர்நாடகா பகுதிக்கு 371 ஜி சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டு, 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனால், இப்பகுதியின் ஆயிரக்கணக்கானோர் உயர் பதவியில் அமர முடிந்தது. இதை நினைவுகூரும் வகையில், இம்மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.கல்யாண கர்நாடகா மேம்பாட்டுக்கு காங்கிரஸ் அரசு திட்டங்கள் வகுத்துள்ளது. இங்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும். இப்பகுதி பல்கலைக்கழகங்களில், புதிய கோர்ஸ்கள் துவக்கப்படும். துவரம் பருப்பு ஆதரவு விலையை அதிகரிக்கும்படி, கல்யாண கர்நாடகா பகுதி மேம்பாட்டு வாரிய தலைவர் அஜய்சிங் உட்பட இப்பகுதி எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து அறிக்கை கேட்டுள்ளேன். அறிக்கை வந்த பின், நடவடிக்கை எடுக்கப்படும்.கல்யாண கர்நாடகா மக்கள், இதய நோய் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற, பெங்களூருக்கு வர வேண்டிய அவசியம் இல்லை. கலபுரகியிலேயே சிகிச்சை பெறலாம்.

நிமான்ஸ்

கலபுரகியில் நிமான்ஸ், சிறுநீரக சிகிச்சை பிரிவுகள் அமைக்க, நடவடிக்கை எடுக்கப்படும். இது பற்றி முடிவு செய்யும்படி, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீலுக்கு உத்தரவிடப்படும். மைசூரிலும் கூட நிமான்ஸ் பிரிவு அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது.கல்யாண கர்நாடகாவுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என, இப்பகுதி அரசியல் தலைவர்கள், மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து, விரைவில் முடிவு செய்யப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ